கோவிந்தா' முழக்கத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த உலகப் புகழ்பெற்ற திருநங்கைகளின் புனிதத் தலமான கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான திருநங்கைகள் மற்றும் பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.
மகாபாரதத்தை நினைவூட்டும் திருவிழா இந்துக்களின் புராண நூலான மகாபாரதத்தில் அரவான் தெய்வத்தின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் அமைந்த இந்த விழா, கடந்த ஏப்ரல்.14-ம் தேதி கொடியேற்றம் மற்றும் சாகைவார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று திருநங்கைகளின் தாலி கட்டும் நெகிழ்ச்சியான நிகழ்வு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இன்று காலை 6 மணியளவில் அரவான் சிரசுக்கு திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
21 அடி உயர பிரம்மாண்ட தேர் இந்த தேரோட்டத்திற்காக கீரிமேடு கிராமத்தில் இருந்து அரவானின் புஜம், மார்பு பகுதிகளும், நத்தம் கிராமத்தில் இருந்து கை, கால்களும் கொண்டு வரப்பட்டு 21 அடி உயர தேரில் பொருத்தப்பட்டன. சிவிலியன்குளம் கிராமத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மரங்களை கொண்டு பாரம்பரிய முறைப்படி தேர் உருவாக்கப்பட்டது.
15 அடி மற்றும் 20 அடி உயர மலர் மாலைகளை தேரில் சாற்றி, வண்ண மலர்களால் அலங்கரித்து கண்கவர் வடிவம் கொடுக்கப்பட்டது. அரவான் சிரசு கோயிலை வலம் வந்து தேரில் பொருத்தப்பட்ட பின்னர், மகா தீபாராதனையுடன் தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கியது.
விண்ணைப் பிளந்த 'கோவிந்தா' கோஷம் திருத்தேரை வடம் பிடித்து இழுக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். "கோவிந்தா கோவிந்தா" என்ற விண்ணைப் பிளக்கும் பக்தி கோஷத்துடன், பெண்கள் குலவையிட, திருநங்கைகள் கும்மியடித்து ஆடிப்பாடி தேரை இழுத்துச் சென்ற காட்சி மெய்சிலிர்க்க வைத்தது.
தேர் செல்லும் வழிநெடுகிலும் கிராம மக்கள் தங்கள் நிலத்தில் விளைந்த தானியங்கள், காய்கறிகள் மற்றும் சில்லரைக் காசுகளை சுவாமி மீது வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர். திருநங்கைகள் சூரத்தேங்காய்களை உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
பந்தலடியில் அழுகளம் தேர் தொட்டி, நத்தம் வழியாக பந்தலடியை சென்றடையும். அங்கு திருநங்கைகள் தாங்கள் அணிந்திருந்த தாலியை அகற்றி, வெள்ளை சேலை அணிந்து ஒப்பாரி வைத்து அழும் "அழுகளம்" நிகழ்ச்சி நடைபெறும். மகாபாரத போரில் அரவான் களபலியானதை நினைவூட்டும் இந்த உருக்கமான நிகழ்வுடன் 18 நாள் திருவிழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினரும், கிராம பொதுமக்களும் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கருத்துகள்
கருத்துரையிடுக