அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.
தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.
காவல்துறையின் தவறான அத்துமீறிய செயல்களினால் காவல்துறை அதன் உயர்மதிப்பை இழந்து வருகிறது. பல காவல் நிலையங்களில் மகளிர் உயரதிகாரிகளே சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது செய்திகளாக வருகின்றன. ஒரு சில பெண் காவல் அதிகாரிகளுக்கு உயரதிகாரிகளால் பாதுகாப்பற்ற சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக பாலியல் துன்புறுத்தல் புகார் மேற்குபகுதி காவல் கண்காணிப்பாளர் மீது காவல்துறையின் INTERNAL COMPLAINT COMMITTEE (ICC) உள் புகார்கள் குழுவிடம், பெண் உதவி ஆய்வாளர் 15-05-2025 அன்று புகார் அளித்துள்ளார்.
கடந்த 05-06-2024-ல் காணாமல் போன மைனர் பெண் குறித்த புகாரின் அடிப்படையில் வில்லியனூர் பகுதியை சேர்ந்த உதவி ஆய்வாளர் மீது தன்னிடம் ரூ.5000 லஞ்சம் பெற்றதாக 06-08-2024-ல் காணாமல் போன பெண்ணின் தந்தை புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் துறை ரீதியான விசாரணை முடிவில் ஓராண்டு கழித்து 01-07-2025-ல் பெண் உதவி ஆய்வாளர் மீதும், வாங்கிய பணத்தை திருப்பிய செலுத்திய அவரது கணவரான உதவி ஆய்வாளர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல்துறையில் உச்சகட்ட கோஷ்டி பூசலும், புகார்களும், விரும்ப தகாத பல்வேறு நடவடிக்கைகளும், நடவடிக்கை எடுக்க வேண்டிய பல்வேறு பிரச்சனைகளில் குற்றம் செய்தவர்கள் காப்பாற்றப்படுவதும் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. பணி நீக்கம் செய்யப்பட வேண்டிய குற்ற செயல் புரிந்தவர்களை பணியிடை மாற்றம் போன்ற சிறிய அளவில் துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதும் வழக்கமாக உள்ளது.
தற்போதைய பெண் உதவி ஆய்வாளர் மீது பதியப்பட்டுள்ள வழக்கு என்பது தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்த உயரதிகாரியின் மீது அளித்த புகாரினால் பழிவாங்கப்பட்டுள்ளதாக பரவலாக பேசப்படுகிறது. தனது மனைவிக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் சம்பந்தமாக உயரதிகாரியிடம் கேள்வி கேட்டதினால் அவரது கணவர் மீதும் லஞ்சத்தை திருப்பி கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத்திலேயே பேச்சு அடிபடுகிறது.
பெண் உதவி ஆய்வாளர் தனது உயரதிகாரியான கண்காணிப்பாளர் மீது அளிக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல் சம்பந்தமாக தற்போது துறை ரீதியாக விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக உள்ளார். அவர் இந்த தவறை செய்திருக்கிறாரா இலலையா என்பது தெரியவில்லை. தற்போது துறை ரீதியாக நடைபெறும் விசாரணை தடையின்றி நேர்மையாக வெளிப்படையாக நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை. எனவே இக்குற்றச்சாட்டின் மீது மரியாதைக்குரிய ஒரு பெண் நீதிபதியின் தலைமையில் நீதி விசாரணைக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
.இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள்
கருத்துரையிடுக