புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"மாமியார் உடைத்தால் மண்சட்டி மருமகள் உடைத்தால் பொன் சட்டி"என்பார்கள், இப் பழமொழிக்கேற்ப புதுச்சேரி மாநிலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு நீக்கப்பட்ட ஊழியர்கள் தங்களது பணியை நிரந்தரம் செய்து தர கோரி புதுச்சேரி முதல்வரை அணுகினால் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களை பணிநிரந்தரம் செய்ய நீதிமன்ற தீர்ப்பு எதிராக உள்ளது, அதனால் தலைமைச் செயலரும் ஆளுநரும் 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களின் பணி நிரந்தரத்தை ஏற்க மறுக்கிறார்கள் என்று கூறுகின்றார்.
அதே நேரத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரி பணி நியமனத்தை ஒப்பந்த அடிப்படையில் எடுப்பது ஏன்? என்ற கேள்வியை எமது அமைப்பின் சார்பில் முன்வைக்கிறோம். முறையான தேர்வு, இட ஒதுக்கீடு முறை அனைத்தும் பின்பற்றப்பட்டு எடுக்கப்படும் இத்தகைய ஒப்பந்த அடிப்படையிலான பணி நியமனம் தவறு என பலமுறை நீதிமன்றம் எச்சரித்தும் நீதிமன்ற ஆணையை மதிக்காமல் ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் புதுச்சேரி மாநிலத்தில் பணி நிரப்புவது சரியா?
ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட பாலசேவிகா , TGT, விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பணி நியமனங்களை முறையாக தேர்வு நடத்தி தகுதி அடிப்படையில் தேர்வு செய்த புதுச்சேரி அரசு, ஒப்பந்த அடிப்படையில் நியமனம் தவறு என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போது அரசு தரப்பில் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் முறையாக தேர்வு செய்யப்பட்டவர்கள், போதிய நிதி ஆதாரம் இல்லாததாலும், மாணவர்களின் கல்விச் சூழலை காரணம் காட்டி தற்காலிகமாக இவர்கள் ஒப்பந்த அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்த இதே புதுச்சேரி அரசு, கிட்டத்தட்ட 5 ஆண்டுகாலம், 3 ஆணரடுகாலம் காலம், 2 ஆண்டுகாலம் என பள்ளிகளில் பணி செய்த ஆசிரியர்களை ஒப்பந்தம் முடிந்து விட்டதாக வெளியேற்றிய போது கொல்லைப்புறமான நியமனங்களுக்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை காரணம் காட்டி இவர்களது பணி நிரந்தரத்தை காலதாமதம் செய்து வெவ்வேறு காரணம் சொல்லி வரும் அரசு.
இன்று உணவு பாதுகாப்பு அதிகாரி பணி நியமனத்தை ஒப்பந்த அடிப்படையில் எடுப்பதை எந்த நீதிமன்றம் ஆணையின்படி நிரப்புகின்றனர் என்பதை தலைமைச் செயலகமும், ஆளுநரும், புதுச்சேரி அரசும் வெளிப்படுத்த வேண்டும்.
முந்தைய ஆட்சி காலத்தில் நியமனம் செய்யப்பட்ட ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்களை ஏற்க மறுக்கும் புதுச்சேரி அரசு ஒப்பந்த அடிப்படையில் புதிய பணிநியமனம் செய்வது எந்த விதத்தில் சரி என்ற கேள்வியை எமது அமைப்பு வெகுஜன சமூக தலைவர்கள் மத்தியில் வைக்கிறோம். வேலைவாய்ப்பு இல்லா சூழலில் வாடும் பட்டதாரி இளைஞர்களின் வாழ்வில் விளையாடும் போக்கை அரசு கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்என குறிப்பிடப்பட்டுள்ளது
கருத்துகள்
கருத்துரையிடுக