இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி மாநில செயலாளர் சலீம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் எம்.தீனதயாளன் லஞ்சம் வாங்கும் போது மத்திய குற்ற புலனாய்வுத் துறையினரால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் செயற்பொறியாளரும், உதவி பொறியாளரும் சிக்கியுள்ளனர். பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டு இருக்கிறது. இது புதுச்சேரி மாநில என். ஆர். காங்கிரஸ்- பிஜேபி அரசாங்கத்தின் லஞ்ச லாவண்ய செயல்களுக்கு ஆதாரமாக அமைந்துள்ளது.
கைது செய்யப்பட்ட தலைமை பொறியாளர் செய்த லஞ்ச ஊழல் நடவடிக்கைகளுக்கு பின்னணியில் இருக்கிற ஆட்சியாளர்கள் யார்...? ஆளும் கட்சிகளுக்கு எவ்வளவு பங்கு சென்றிருக்கிறது போன்ற விபரங்கள் வெளிச்சத்திற்கு வர வேண்டும். மக்களின் வரிப்பணத்தில் உருவாகியிருக்கிற அரசாங்கத்தின் மாபெரும் கட்டமைப்புகளும், திட்டங்களும் இப்படிப்பட்ட ஊழல் பெருச்சாளிகளால் கொள்ளையடிக்கப்பட்டுகின்றன.
சிபிஐ சோதனையில் பிடிப்பட்ட ஆதாரங்கள், கோப்புகள், டைரிகள், விபரங்கள் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு குற்றவாளிகள் யாராக இருந்தாலும் எந்த உயர் நிலையில் இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.
பொதுப்பணித்துறை மட்டுமல்ல கலால் துறை மூலமாக மதுபான உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவதிலும் ரெஸ்டோபார்கள் அனுமதி வழங்குவதிலும் நடந்துள்ள ஊழல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வருவாய் துறை மூலம் நிலவணிகம் என்பது சில முக்கிய அரசியல்வாதிகளால் கொள்ளைக்கூடாரமாக மாற்றப்பட்டிருக்கிறது. காமாட்சி அம்மன் கோயில் நில அபகரிப்பு, காரைக்கால் கோவில் நில அபகரிப்பு போலி பத்திர பதிவுகள் மூலம் நடந்த சில அபகரிப்பு மோசடிகள் அதற்கு உடந்தையாக இருந்த கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கிய பத்திரப்பதிவுத்துறை தலைமை பதிவாளர், நில அளவுத்துறை இயக்குனர், காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சுகாதாரத் துறையிலும் ஊழல் நடைபெறுகிறது.
இந்த நான்கு ஆண்டுகால என்.ஆர்.காங்கிரஸ்- பிஜேபி ஆட்சியில் அரசின் பல முக்கியத்துறைகளில் லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடுகிறது. மக்களின் வரிப்பணமும், அரசாங்கத்தின் திட்ட நிதிகளும், அரசு சொத்துக்களும் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கின்றன.
இதற்கு முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், சபாநாயகர் ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும்.
விசாரணைகள் அனைத்தும் அரசியல் தலையீடுயின்றி நடந்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக