கடந்த 4 வருடமாக ஜன்னல் வழியாகவே உலகத்தை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றும், ஒரே ஒரு வீல் சேர் மட்டும் கொடுங்கள் என அமைச்சர் தொகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளி இளம் பெண் அரசுக்கு கோரிக்கை விடுத்து வெளியிட்டுள்ள வீடியோ பலரது நெஞ்சையும் உருக்கியுள்ளது
புதுச்சேரி என்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் தேனி.ஜெயக்குமார்.இவர் மங்களம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், சமூக நலத்துறை அமைச்சராகவும் உள்ளார்.
இவரது தொகுதிக்குட்பட்ட உறுவையார் பகுதியை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி பட்டதாரி பெண் அம்பிகை(22).தந்தையை இழந்த இவர் அம்மா ஆனந்தியுடன் வசித்து வருகிறார். அம்மாவின் உதவியுடன் தனியார் கல்லூரியில் பிகாம் படித்துள்ள அம்பிகை கடந்த 4 வருடமாக வேலை வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் வீட்டிலேயே முடங்கியுள்ளார்.
இந்த நிலையில் மாற்றுத்திறனாளி அம்பிகை, உதவி கேட்டு வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், படித்து முடித்துவிட்டு வேலை வாய்ப்பு இல்லாமல் கடந்த 4 வருடங்களாக, வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடப்பதாகவும், ஜன்னல் வழியாக மட்டுமே இந்த உலகத்தை பார்த்து வருகிறேன் என உருக்கமாக தெரிவித்துள்ளார். மேலும் கை,கால்கள் செயல் இழந்து விட்டதால் சமூக நலத்துறையில் வீல் சேர் கேட்டு விண்ணப்பித்ததாகவும், அதனை தராமல் அதிகாரிகள் அலை கழிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் புதுவை அரசு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தொகுதியில் வசிக்கும் மாற்று திறனாளி பட்டதாரி பெண், வீல் சேர் கேட்டு வெளியிட்டுள்ள வீடியோ பலரது நெஞ்சத்தையும் உருக்கி உள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக