புதுச்சேரி பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட கழிப்பறையில் விஷ வாயுக்கள் கசிவு மரணங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய தலைமைச் செயலரின் உத்தரவுப்படி அமைக்கப்பட்ட குழுவினர் ரூர்க்கி இந்திய தொழில் நுட்பக் கழக சிவில் இன்ஜினியரிங் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் ஏ.ஏ. காஸ்மி, நீரி (NEERI) அறிவியல் அறிஞர் முனைவர் சிவக்குமார், சிறப்பு அழைப்பாளர் புதுச்சேரி பொறியியல் பல்கலைக் கழகப் பேராசிரியர் முனைவர் சரவணன் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்ப வல்லுநர் பிரவின் சிங் சரண் ஆகியோர் 22-06-2024 அன்று காலை கனகனேரி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் புதுநகர் பகுதியையும் மேலும் பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டில் உள்ள சில பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கனகனேரி கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யும் முறைகள் பற்றி விரிவாக ஆராய்ந்தனர். அங்கே கழிவுநீர் மாதிரி எப்படி சேகரிக்கப்படுகிறது, எந்தெந்த சோதனைகள் செய்யப்படுகின்றன அவை முறையாக செய்யப்பட்டு வெளியேற்றப்படுகிறதா எனவும் ஆய்வு செய்தனர். பிறகு சம்பவம் நடந்த புதுநகர் பகுதிக்கு சென்றனர். அங்கே வீடுகளில் கழிப்பறைகள் எப்படி கட்டப்பட்டுள்ளன. எந்தெந்த முறைகளில் இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை பார்த்து அந்த மக்களையும் சந்தித்து விசாரித்தனர் .சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாக என்னென்ன அறிகுறிகள் தென்பட்டன என்றும் கேட்டறிந்தனர்.அங்கே அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் தொட்டிகளையும் ஆய்வு செய்தனர் .நிறைவாக தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் கூடி விவாதித்து மேலும் பல தகவல்களை பெற்று சம்பவத்துக்கான காரணங்களை கண்டறிந்தனர்.கழிவறை இணைப்புகளில் 'S' அல்லது 'P' வடிவ நீர்க்காப்பு முறை (water seal) இல்லாதது,முறையான ஆய்வு தொட்டிகள், வாயு வெளியேறும் குழாய்கள் பொருத்தப்படாதது ஆகியவை முதன்மைக் காரணங்களாக கண்டறிந்தனர். மேலும் அதிகப்படியான வெப்பத்தின் மூலமாகவும் கழிவுநீர் குழாய்களில் H2S அமிலம் கூடுவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறினர் .சம்பவம் நடந்த முதல் நாளான 10-06-2024 அன்று புதுவையின் வெப்பநிலை 39°C'. இது தவிர கழிவு நீரில் சல்பேட் அளவு அதிகமாக இருந்ததும் H₂S அதிகமாகி water seal இல்லாத இடங்களில் வெளியேறி இருக்கிறது என்றும் தெரிவித்தனர். ஆய்வுக் குழுவினர் தங்கள் ஆய்வறிக்கையை ஓரிருநாளில் அரசுக்கு சமர்ப்பிப்பர்.
இந்த கள ஆய்வின் போது புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் டாக்டர் மு.தீனதயாளன், பொது சுகாதாரக் கோட்ட செயற்பொறியாளர் உமாபதி, திட்ட செயற்பொறியாளர் சுந்தர மூர்த்தி, தேசிய நெடுஞ்சாலைகள் செயற்பொறியாளர் மு. பாலசுப்பிரமணியன், நீர்ப்பாசனக் கோட்ட செயற்பொறியாளர் இராதாகிருட்டுணன், உதவிப் பொறியாளர் வைத்தியநாதன், இளநிலைப்பொறியாளர் பாலாஜி மற்றும் அலுவர்கள் உடனிருந்தனர்
கருத்துகள்
கருத்துரையிடுக