புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வெற்றி கூட்டணி வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து பாகூர் சட்டமன்ற தொகுதியில் புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் பேசியதாவது,
மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக, காங்கிரஸ் எந்த அரசாக இருந்தாலும் தமிழ் சமுதாய மக்களுக்கு எதிரான அரசாக இருக்கிறது. குறிப்பாக புதுச்சேரி மாநிலத்தின் உரிமைகள் தொடர்ந்து இவ்விரண்டு தேசிய கட்சிகளாலும் மறுக்கப்பட்டு வருகின்றன. எனவே தான் தமிழர் உரிமைகளை மீட்கவும், புதுச்சேரியை காப்பாற்றவும் அதிமுக தேசிய கட்சிகளை தவிர்த்து கூட்டணி அமைக்காமல் இந்த தேர்தலில் போட்டியிடுகிறது.
இந்த பாகூர் சட்டமன்ற தொகுதி என்பது புதுச்சேரி மாநிலத்தின் நெற்களஞ்சியமாகும். ஆனால் தற்போது விவசாய விளை நிலங்கள் பிளாட் போட்டு விற்பனை செய்யப்படுகின்றது. இதை தடுக்க வேண்டிய ஆட்சியாளர்களே பிளாட் போட்டு விற்பனை செய்கின்றனர். நன்கு லாபத்தில் இயங்க கூடிய சுமார் இருபதாயிரம் கோடி மதிப்புள்ள மின்துறையை புதுச்சேரி அரசு ஒரு கொள்கை முடிவு எடுத்து தனியாரிடம் விற்பனை செய்துள்ளது. அதற்கு முதல் காரணம் நமது பாகூர் சட்டமன்ற தொகுதியில் சுமார் நூறு மீட்டருக்கு உள்ளேயே தரமான நிலக்கரி இருப்பதாக மத்திய மாநில பாஜக அரசுகள் செய்த ஆய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நிலக்கரியை வைத்து அனல் மின்நிலையம் அமைத்து அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தனியாரே மின்வினியோகம் செய்ய மத்திய பாஜக அரசு சதி செய்து வருகிறது. இதற்கு இங்குள்ள மின் துறை அமைச்சர் துணை போகிறார்.
இதுபற்றி இங்குள்ள திமுக சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் நபர் வாய்திறப்பதே இல்லை. இந்த பகுதியில் நிலக்கரி எடுக்க ஆரம்பித்தால் பாகூர் சட்டமன்ற தொகுதியே முழுமையாக காலி செய்துவிடுவார்கள். இதை உணர்ந்து பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் வாக்களிக்காமல் அதிமுகவிற்கு இந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இப்பகுதிக்கு வரும் துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் என யார் வந்தாலும் மக்கள் கேள்வி கேட்பது ரேஷன் கடையை எப்போது திறப்பீர்கள், ரேஷன் பொருட்களை எப்போது போடுவீர்கள் என கேள்வி கேட்கின்றனர். அமைச்சர் பெருமக்களும் வாய்க்கு வந்தபடி எதையாவது ஒரு பொய் சொல்லிவிட்டு ஓடிவிடுகின்றனர். பாஜக அரசு ஆட்சி அமைந்து 3 ஆண்டுகாலம் ஆகிறது. ஏன் ரேஷன் கடைகள் திறக்கப்படவில்லை. தரமான பொன்னி சாப்பாட்டு அரிசி ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்படும் போது 20 கிலோ அரிசிக்கு 1200 ரூபாய் பணமாக வழங்க வேண்டிய இந்த அரசு ஏன் வெறும் 600 ரூபாய் மட்டும் வழங்குகிறது. இலவச அரிசி வழங்கும் திட்டத்தில் ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் அளவில் பாஜக அரசு மக்களை ஏமாற்றுகிறது.
தற்போது நான்கு வழிச்சாலை இந்த பகுதியில் அமைக்கப்படுகிறது. நான்கு வழிச்சாலை அமைந்தால் இப்பகுதி விவசாய விளைநிலங்களும், சிறு சிறு கிராமங்களும் பாதை வசதியின்றி துண்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆளும் பாஜக அரசுக்கு இதன் மீது எந்த அக்கறையும் இல்லை. விவசாய விளைநிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த விவசாயிகளுக்கு இதுவரை உரிய நிவாரணம் கூட வழங்கப்படவில்லை.
பாகூர் பகுதியில் கடந்த 20 ஆண்டுகாளமாக பேருந்து நிலையம் கொண்டுவருவோம் என காங்கிரஸ் அரசும், பாஜக அரசும் இரண்டு முறை அடிக்கல் நாட்டினர். ஆனால் பேருந்து நிலையம் கொண்டுவரப்படவில்லை. இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அதிகப்படியான நோயாளிகள் தினந்தோறும் வருகின்றனர். தரமான மருத்துவமனையாக மாற்றம் செய்ய இந்த அரசு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆம்புலன்ஸ் இருக்கிறது. ஆனால் அதை இயக்க ஓட்டுனர்கள் இல்லை. இந்த ஆம்புலன்ஸ் மூலம் எந்த நோயாளியும் பயன்பெற முடியாத நிலை உள்ளது.
இந்த தொகுதியில் உள்ள சோரியாங்குப்பம் பகுதி முழுக்க முழுக்க மதுபான விற்பனை செய்யும் பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. நகரப்பகுதியில் தெருவுக்கு தெரு ரெஸ்டோ பார்கள் திறப்பது போன்று சோரியாங்குப்பம் பகுதிகள் முழுவதும் தமிழக மதுபான பிரியர்களுக்காக அளவுக்கு அதிகமான மதுபான கடைகள் சட்டத்திற்கு விரோதமாக திறக்கப்பட்டுள்ளன. இதை தடுக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு எண்ணம் இல்லை.
மணப்பட்டு கிராமத்தில் சுற்றுலாவை மேம்படுத்த திரைப்படம் நகரம் அமைக்கப்படும் என்றார்கள். இதுவரை அமைக்கவில்லை. புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் மீன்பிடி துறைமுகம் கொண்டுவருவோம் என்றார்கள். இதுவரை கொண்வரப்படவில்லை. விளையாட்டு வீரர்கள் நிறைந் பகுதியாக பாகூர் தொகுதி உள்ளது. ஆனால் உள்விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டு இன்று வரை திறக்கப்படவில்லை.
மின்துறை தனியார் மயமாக்கப்படுவதின் மூலம் மின்கட்டண வசூல் முறை ப்ரீபெய்டு சிஸ்டத்தில் கொண்டுவரப்படுகிறது. மின்துறையை விளைக்கு வாங்க கூடிய தனியார் நன்மை அடைய மக்கள் வரிப்பணத்தில் சுமார் 400 கோடி ரூபாய் அளவில் டிஜிட்டல் மீட்டர் மாற்றப்பட்டு வருகிறது. மின்கட்டண வசூலில் ப்ரீபெய்டு திட்டம் கொண்டுவரப்பட்டால் நமது செல்போனில் எப்படி முன்பணம் தீர்ந்தவுடன் இணைப்பு துண்டிக்கப்படுகிறதோ. அதே போல் நமது வீட்டில் மின் இணைப்பும் நள்ளிரவில் கூட துண்டிக்கப்படும். கடந்த சில மாதங்களாக செயற்கையான மின்தட்டுப்பாட்டை ஆளும் பாஜக அரசு உருவாக்கி மக்களுக்கு தொல்லையை கொடுக்கின்றது.
பாகூர் ஏரி சுற்றுலாத்தளமாக மாற்றப்படும் என கூறியிருந்த நிலையில். இதுவரை அதற்கான எந்த பூர்வாங்க பணிகளும் தொடங்கப்படவில்லை.
ஆகவே நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இரண்டு தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை மக்கள் புறக்கணித்து அதிமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் மாநில உரிமைகள் நிலைநாட்டப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கருத்துகள்
கருத்துரையிடுக