புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதுச்சேரி மாநில மாணவர்களின் நலனில் துளியும் அக்கறையின்றி அரசு செயல்பட்டு வருகிறது. காலத்தோடு நடத்தி முடிக்கப்பட வேண்டிய மருத்துவ கலந்தாய்வை நடத்தி முடிக்கவில்லை. பல மாநிலங்களில் மருத்துவ கலந்தாய்வு முடித்து மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. ஆனால் புதுச்சேரியில் நிர்வாக சீர்கேட்டால் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அங்கீகாரம் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது. மத்திய அரசின் உத்தரவுப்படி தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை பெற சட்டம் இயற்றாமல் பேரம் பேசி அரசு ஒதுக்கீடு இடங்களை பெற காலதாமதம் ஏற்பட்டது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க மேதகு துணை நிலை ஆளுநர் அறிவுறுத்தினார். முன்கூட்டியே திட்டமிடல் இல்லாமல், அமைச்சரவை கூட்டம் நடத்தி அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு கோரி கோப்பு அனுப்பப்பட்டது. இந்த கோப்பையும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முறைப்படி தயாரித்து அனுப்பாததால் பல்வேறு விளக்கங்களை மத்திய அரசு கோரியுள்ளது. இதனால் இன்றுவரை அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கவில்லை. *மேதகு துணை நிலை ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார் என்ற ஒரே காரணத்திற்காக திட்டமிட்டே காலதாமதம் செய்யப்படுகிறது.* இந்த இடஒதுக்கீடு கிடைக்காததால் காலத்தோடு மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படாமல் புதுச்சேரி மாநில மாணவர்களும், பெற்றோர்களும் பரிதவித்து வருகின்றனர்.
மருத்துவ மாணவர்கள் நீட் அல்லாத படிப்புகளுக்கும் விண்ணப்பித்துள்ளனர். இதனால் நீட் அல்லாத படிப்புகளில் சேர முடியாமல் பிற மாணவர்களும் பரிதவித்து வருகின்றனர். ஒட்டுமொத்தமாக மாணவர்களுக்கு முறைப்படி கலந்தாய்வைக்கூட நடத்த முடியாமல் கையாளாகாத அரசாக புதுச்சேரி அரசு செயல்பட்டு வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
*தமிழகத்தில் புரட்சித்தமிழர் திரு.எடப்பாடியார் அவர்களின் தலைமையிலான அதிமுக ஆட்சியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்க முடிவு செய்தது. இதுதொடர்பான சந்தேகங்களை அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சரும், அரசு செயலர்களும் புதுடெல்லிக்கு நேரில் சென்று விளக்கி காலத்தோடு அனுமதி பெற்றனர்.* இதனால் தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் பலர் தற்போது மருத்துவக்கல்வியை மகிழ்ச்சியோடு படித்து வருகின்றனர்.
*புதுச்சேரி மாநில அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் எண்ணம் உண்மையாக இருந்தால், உடனடியாக சுகாதாரத்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர், அதிகாரிகளை புதுடெல்லிக்கு அழைத்துச்சென்றுணு அனுமதி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.* முதலமைச்சர் அரசியல் நாடகம் நடத்துவதற்காக மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடக்கூடாது. இந்த ஆண்டு இடஒதுக்கீடு பெற முடியவில்லை என்றால் தனது இயலாமையை வெளிப்படையாக அறிவித்துவிட்டு, மருத்துவ படிப்புக்கு கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக