புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் புதுடெல்லி சிபிஐ இயக்குனருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,
புதுச்சேரி மாநிலம் கதிர்காமத்தில் அரசு இந்திராகாந்தி மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த கல்லூரியின் இயக்குனராக திரு.உதயசங்கர், நிதி அதிகாரியாக திரு.விஜயகுமார், மருத்துவ கண்காணிப்பாளராக திரு.ஜோசப்ராஜேஷ், நிர்வாக அதிகாரியாக திரு.முத்துலிங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.
மருத்துவ கல்லூரிக்கு தேவையான மருந்துகள் முதல், மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்வது வரை மிகப்பெரும் முறைகேடுகள் நடந்து வருகிறது. மருத்துவ கல்லூரியில் தற்காலிக பணி நியமனம் செய்வதிலும் எந்த நியமன விதிகளும் கடைபிடிக்கப்படுவதில்லை. அரசு மருத்துவக்கல்லூரியில் பணி நேரத்தில் பேராசிரியர்கள், மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகள், தனியார் மருத்துவ கல்லூரிகளில் பணியாற்றுகின்றனர். இதை கண்டுகொள்ளாமல் இருக்க புதுச்சேரி அரசு மருத்துவக்கல்லூரி உயரதிகாரிகளுக்கு கையூட்டு வழங்கப்படுகிறது.
இத்தகைய சூழலில் நீட் தேர்வு அடிப்படையில் தகுதியான மாணவர்களை சேர்க்காமல் புறக்கணிக்கின்றனர். சுயலாப நோக்கோடும், ஆதாயம் பெற்றுக்கொண்டும் மருத்துவக்கல்லூரியில் பணியாற்றும் இயக்குனர் திரு.உதயசங்கர் தலைமையிலான அதிகாரிகள் மருத்துவக்கல்வியில் வெளிநாடு வாழ் இந்தியர் மருத்துவ இடங்களை விற்று வருகின்றனர். புதுச்சேரியை தவிர வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு மருத்துவ இடங்களை தாரை வார்க்கின்றனர்.
தற்போது *பிரெஞ்சு வாழ் மக்கள் உள் ஒதுக்கீடு என புதிதாக விஞ்ஞானரீதியிலான ஊழலில் இறங்கியுள்ளனர்.* வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் பெற வேண்டிய சுமார் ரூ.ஒரு கோடிக்கும் மேலான கட்டணத்தை பெறாமல் தன்னிச்சையாக கட்டணத்தை சுமார் ரூ.4 லட்சமாக குறைக்கின்றனர். *இதனால் அரசு மருத்துவ கல்லூரிக்கு ஆண்டுதோறும் ரூ.2 கோடி வருமான இழப்பை ஏற்படுத்தி திட்டமிட்டு மோசடி செய்கின்றனர்.*
தொடர்ந்து புதுச்சேரி அரசு மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தின் மீது எழுந்து வரும் ஊழல் புகார்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. எனவே இனியும் தாமதிக்காமல், அரசு மருத்துவக்கல்லூரி அதிகாரிகள் மீது சிபிஐ உரிய விசாரணையை உடனடியாக நடத்த வேண்டும் என புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக