புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,
புதுச்சேரி மருத்துவக்கல்லூரி இடங்களை ஒதுக்கீடு செய்வதில் தொடர்ந்து முறைகேடுகள் நடப்பதாக அதிமுக சார்பில் குற்றம் சாட்டி வருகிறோம். புதுச்சேரி மண்ணின் மைந்தர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் அனைத்தும் சுயலாப நோக்கத்திற்காக விற்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தி அதிமுக சார்பில் கடிதம் அனுப்பியுள்ளோம்.
தற்போது புதுச்சேரி மருத்துவக்கல்வி இடங்களில் வெளிநாடு வாழ் இந்தியர் இடங்கள் சுயலாபத்துக்காக அபகரிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு மருத்துவக்கல்லூரியில் என்.ஆர்.ஐ இடஒதுக்கீடாக 22 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு மருத்துவ இடத்துக்கு சுமார் ரூ.ஒரு கோடி வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் புதுச்சேரி அரசு மருத்துவக்கல்லூரியின் வளர்ச்சிக்கும், ஊழியர்களின் சம்பளத்திற்கும், கல்வி நிறுவன மேம்பாட்டிற்கும் பெரிதும் உதவும்.
இந்த என்.ஆர்.ஐ இடஒதுக்கீட்டில் இருந்து பிரான்ஸ்நாட்டில் வசிப்பவர்களுக்கான உள் ஒதுக்கீடாக 2 இடங்களை வழங்க முடிவெடுத்துள்ளனர். மருத்துவக்கல்லூரி நிர்வாகக்குழுவின் தலைவரான முதலமைச்சர் உத்தரவின்படி இந்த இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த இடங்களுக்கு என்.ஆர்.ஐ கட்டணம் வசூலிக்காமல், புதுச்சேரி மண்ணின் மைந்தர்களுக்கு நிர்ணயிக்கப்படும், அரசு மருத்துவக்கல்விக்கான குறைந்தபட்ச கட்டணத்தை நிர்ணயித்து மாபெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
முதலமைச்சர் தனக்கு வேண்டியவர்களுக்காக சுயலாப நோக்கத்தோடு, புதிதாக பிரான்ஸ் இடஒதுக்கீடு முறையை கொண்டுவந்து, குறைந்த கட்டணத்தை நிர்ணயித்துள்ளார். இது கடும் கண்டனத்திற்குரியது. ஏற்கனவே சம்பளமின்றி, ஊழியர்கள் இன்றி, போதிய மருத்துவ வசதிகள் இன்றி அரசு மருத்துவக்கல்லூரியின் தரம் குறைந்து வருகிறது. மாபெரும் போராட்டத்திற்கு பிறகே இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
இத்தகைய சூழலில் மருத்துவக்கல்லூரிக்கு என்ஆர்ஐ கட்டணமாக வர வேண்டிய ரூ.பல கோடியை மறைமுகமாக அபகரிப்பது நிர்வாகத்தை சீர்குலைக்கும். எனவே பிரான்ஸ் நாட்டு உள் ஒதுக்கீடு என புதிய ஒதுக்கீடு அளிக்கும் முடிவை கைவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக