தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகத்திற்கு சாதகமாக செயல்படும் முதலமைச்சர் ரங்கசாமி.. அதிமுக குற்றச்சாட்டு.!
புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.mla., வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதுச்சேரி அரசு தொடர்ந்து மாணவர்கள் நலனுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரியில் தேசிய மருத்துவ ஆணையம் சுட்டிக்காட்டிய எந்த குறைபாடுகளையும் சரி செய்யவில்லை. இதனால் புதுச்சேரியில் உள்ள ஒரே அரசு மருத்துவ கல்லூரியின் அங்கீகாரமும் ரத்தாகி உள்ளது. தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகங்களுக்கு சாதகமாகவே தொடர்ந்து முதலமைச்சரும், அரசு மருத்துவக்கல்லூரி அதிகாரிகளும் செயல்படுகின்றனர்.
அரசு மருத்துவ கல்லூரிக்கு மீண்டும் அங்கீகாரம் பெற நடவடிக்கை எடுத்ததுபோல முதலமைச்சரும், அதிகாரிகளும் கண்துடைப்பு நாடகம் நடத்தியுள்ளனர். தேசிய மருத்துவ ஆணையம் சுட்டிக்காட்டிய குறைகளை சீர்செய்த பல மாநில மருத்துவக்கல்லூரிகளுக்கு மீண்டும் அங்கீகாரம் எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் புதுச்சேரி அரசு மருத்துவக்கல்லூரிக்கு மட்டும் இன்று வரை மாணவர் சேர்க்கையை நடத்த அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் வழங்கவில்லை. புதுச்சேரி சுகாதாரத்துறை அதிகாரிகள், அரசு மருத்துவக்கல்லூரி அதிகாரிகள் மாணவர்கள் எதிர்காலம் தொடர்பான இவ்விஷயத்தில் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
2023-24ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடத்த வரும் 26ம் தேதி மாலை 3 மணியுடன் காலக்கெடு நிறைவடைகிறது. ஆனால் இதுவரை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அங்கீகாரம் பெற்று மாணவர் சேர்க்கை நடத்த எந்த நடவடிக்கையையும் அரசு மேற்கொள்ளவில்லை. நீட் தேர்வு முடிவு வெளியாகும் முன்பே அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுமதிபெறுவோம் என முதலமைச்சர் உறுதியளித்திருந்தார். ஆனால் உறுதியளித்தபடி அனுமதியை பெறவில்லை, இதுவும் முதலமைச்சரின் கபடநாடகம்தான். தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கும் என தவறான தகவல்களை தொடர்ந்து பரப்பி வருகின்றனர். தேசிய மருத்துவ ஆணையம் எழுத்துப்பூர்வமாக அனுமதி அளித்தால் மட்டுமே இந்த ஆண்டு அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கையை நடத்த முடியும்.
புதுச்சேரி முதலமைச்சரும், அதிகாரிகளும் சுயநலம் கருதாமல், உடனடியாக மாநில ஏழை, எளிய மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு அரசு மருத்துவக்கல்லூரிக்கு அங்கீகாரம் பெற உரிய உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக