ஆன்மீகம் மற்றும் சுற்றுலாவிற்கு புகழ் பெற்ற புதுச்சேரி மாநிலத்தில் குறிப்பாக என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசு பொறுப்பேற்றதிலிருந்து வட மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு தாராளமாக கஞ்சா கடத்தி வரப்படுவதும், அது புதுச்சேரியில் தடையின்றி விற்கப்படுவதும் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது.
கஞ்சா பழக்கத்திற்கு இளைஞர்கள், மாணவர்கள் அடிமையாகி வருவதும், போதையிலிருந்து மீள முடியாமல், சமூக விரோதிகளாய் மாறுவதும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதில் சிறார்கள் பெருமளவு அடிமையாகி தங்கள் வாழ்க்கையை சீரழித்து வருகின்றனர் என்பது தினந்தோறும் நாளிதழ்களில் வரும் செய்தியே அதற்கு சான்றாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கஞ்சாவை ஒழிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் நான் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தேன். அதற்கு கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தார்கள். அதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர், கஞ்சா வியாபாரிகளுக்கு எதிராக PITNDPS சட்டத்தின் கீழ் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். குண்டர் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, கஞ்சா விற்போர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடப்படும். ஆப்ரேஷன் விடியல் மூலம் சிறப்பு நடவடிக்கை எடுத்து கஞ்சா முற்றிலும் கட்டுப்படுத்தப்படும். கல்வி நிறுவனங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (ANC) அனைத்து கல்வி நிறுவனங்களிலும் அமைக்கப்படும் என்றெல்லாம் சொன்னார்கள்.
ஆனால் அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்து ஒரு மாதம் கடந்த நிலையில் கஞ்சா கட்டுப்படுத்தப்பட்டதாக தெரியவில்லை. கஞ்சா பொட்டலம் விற்கப்பட்ட காலம் மாறி இன்று கஞ்சா பால் டெலிவரி செயவதுபோல், டோர் டெலிவரி செய்யும் நிலைக்கு கஞ்சா வியாபாரம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் தான் கொடுத்த உறுதிமொழியை அமைச்சர் மறந்துவிட்டாரா? அல்லது ரெஸ்டோ பார்களை திறப்பது போல் கஞ்சா விற்பனையை அனுமதிக்கிறாரா என்று தெரிய வேண்டும். அமைச்சர் அவர்கள் தான் கொடுத்த உறுதிமொழி ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை என்றால் அதன் பொருள் என்ன.?
புதுச்சேரி காவல் துறையின் திறமையில் குறை சொல்ல முடியாது. ஆனால் கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது என்பது காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதா? அல்லது இந்த விற்பனைக்கு பின்புலமாக உள்ளனரா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. அவர்களுக்கு தெரியாமல் புதுச்சேரிக்குள் கஞ்சா வரவும் முடியாது, விற்கவும் முடியாது.
ஆகவே, போதையின் பாதையில் திசைமாறி செல்லும் இளைஞர்களை தடுக்க வேண்டும். அப்போது தான் இளைஞர்கள், மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும். புதுச்சேரி மாநிலத்தில் இளைய சமூகத்தினரை சீரழிக்கும் கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்க அத்தொழிலில் ஆணிவேராக இருக்கும் கும்பலை கூண்டோடு பிடிக்க சிறப்பு காவல் படை அமைக்க வேண்டும். மேலும் கஞ்சா விற்பனை நடைபெறும் பகுதியில் பணிபுரியும் காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்ய அரசு கடுமையான உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக