புதுச்சேரி அதிமுக மாநில கழக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,
புதுச்சேரி அரசு பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை மூலம் 35 சுருக்கெழுத்தர் பணிக்கு காலாப்பட்டில் உள்ள அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் போட்டித்தேர்வு நடந்தது. இந்த தேர்வில் 520 பேர் பங்கேற்றனர். இந்த போட்டித்தேர்வில் பல்வேறு முறைகேடுகள் அரங்கேறியுள்ளதை புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்த போட்டித்தேர்வில் ஒரு நிமிடத்துக்கு நிறுத்த குறியீடுகளுடன் 80 வார்த்தைகள் வீதம் 10 நிமிடத்துக்கு நிறுத்த குறியீடுகளுடன் 800 வார்த்தைகளை தேர்வு நடத்துபவர் வாசிக்க வேண்டும். அதை குறிப்பெடுத்த தேர்வர்கள் 50 நிமிடத்தில் தட்டச்சு செய்து தர வேண்டும். ஆனால் தேர்வு நடத்துபவர் 10 நிமிடம் பொறுமையாக வாசிப்பதற்கு பதிலாக 8 நிமிடத்திற்குள் வார்த்தைகளை வாசித்து முடித்துள்ளார். அவரின் உச்சரிப்பு தெளிவாக இல்லை. வார்த்தைகளை வாசித்து முடித்த பிறகு பல்வேறு திருத்தங்கள் செய்யும்படியும் அவர் கூறியுள்ளார். இதனால் தேர்வு எழுதியவர்கள் மிகுந்த சிரமத்துக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.
இந்த தேர்வுக்காக சுமார் 5 ஆண்டுகள் வரை கடுமையாக இளைஞர்களும், இளம்பெண்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இவர்களின் அரசுப்பணி என்ற கனவை ஒரு மணி நேரத்தில் சிதைத்துள்ளனர். முறைகேடாக நடந்த தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் ந டத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இளைஞர்களின் குறைகளை முழுமையாக கேட்டறியாத முதலமைச்சர், அனைவருக்கும் ஒரே மாதிரிதானே தேர்வு நடத்தப்பட்டுள்ளது. உ ங்களில் யார் நன்றாக எழுதியுள்ளார்களோ, அவர்கள்தான் தேர்வு செய்யப்பட போகிறார்கள். இதற்குமேல் ஒன்றும் செய்ய முடியாது என இறுமாப்போடு பேசியுள்ளார்.
முதலமைச்சரின் இந்த பேச்சு, 3 தொகுதிகளை சேர்ந்தவர்களை மட்டுமே சுருக்கெழுத்தர் பணிக்கு தேர்வு செய்வதற்கான திட்டமிட்ட சதியாக இருக்கலாம்? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு மையத்தில் நேர்மையாக தேர்வு நடத்துவதற்கான எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. தேர்வு தொடங்கும் நேரத்தை கணக்கிட அனைவரும் பார்க்கும்படியாக கடிகாரம் அமைக்கப்படவில்லை. ஆங்கில இலக்கணமும் பிழையாக வாசிக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
எனவே அரைகுறையாக, முறையான திட்டமிடல் இன்றி நடத்தப்பட்ட சுருக்கெழுத்தர் பணிக்கான போட்டி தேர்வை மேதகு துணை நிலை ஆளுநர் ரத்து செய்ய வேண்டும். நேர்மையாகவும், வெளிப்படையாகவும் சுருக்கெழுத்தர் பணிக்கான போட்டி தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக