புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு, தலைமை செயலருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,
புதுச்சேரி மாநிலத்தை உள்ளடக்கிய காரைக்கால், மாஹே ஏனாம் பகுதிகளில் மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்களை செயல்படுத்துவது அரசின் கடமை. அதுவே சட்டமன்ற உறுப்பினர்களின் நோக்கமாகும். மக்களால் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அந்தெந்த பகுதியில் இருக்கும் குறைகளை சுட்டிகாட்டினால் அதை நிவர்த்தி செய்து கொடுக்க கூடிய இடத்தில் இருப்பவர்கள் IAS அதிகாரிகளும் அந்தெந்த துறை சார்ந்த தலைவர்கள் மற்றும் இயக்குநர்கள் ஆவர். இவர்கள் மக்களுக்கான பிரச்சனைகளில் உள்ள குறைபாடுகளை களைய எப்போதும் தயாராக இருக்க வேண்டும். ஆனால் சில IAS அதிகாரிகள் தலைமை செயலகத்தில் நான்கு சுவற்றுக்கு மத்தியில் அமர்ந்து கொண்டு அந்தெந்த துறை தலைவர்களையும் இயக்குநர்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அவர்கள் சொல்வதை மட்டும் செய்ய வேண்டும் என்று தங்களின் ஆளுமையை திணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நம் புதுச்சேரி மாநிலத்தில் மூன்று அதிகார மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. ஒன்று கவர்னர் அலுவலகம், இரண்டாவது தலைமை செயலகம், மூன்றாவது தான் சட்டமன்றம் என்ற நிலைமை உள்ளது. இப்படியிருப்பதால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்கு உரிய அங்கீகாரம் இல்லாத நிலை உள்ளது. மத்திய அரசால் நியமிக்கப்படும் IAS அதிகாரிகள் புதுச்சேரி மாநில வளர்ச்சி மற்றும் கட்டமைப்பை மேம்படுத்த உதவியாக இருக்க வேண்டும். தற்போது புதுச்சேரி மாநிலம் சுற்றுலா மற்றும் தொழில் நிறுவனங்கள் மூலம் வளர்ச்சி பாதையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதற்கு ஏற்ப உள் கட்டமைப்புகள் இல்லாத சூழ்நிலை இருப்பதால் சுற்றுலா பயணிகளும் வர்த்தக நிறுவனங்களும் சிரமத்திற்கு
உள்ளாகிறார்கள். உதாரணத்திற்கு குண்டும், குழியுமான சாலைகள் சேதமான வடிகால் வாய்க்காலில் தேங்கி இருக்கும் சாக்கடை கழிவுநீர், பெரும்பாலான வீதிகளில் வழிந்தோடி கொண்டிருக்கும் பாதாள சாக்கடை கழிவுநீர், பிரதான சாலைகளில் கழிப்பறை இல்லாததால் இயற்கை உபாதையை கழிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் அவதிப்படுவதை கண்டுகொள்ளாமல் இருப்பது கட்டுப்பாடற்ற சாலை ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல், பிரதான சாலைகளில் நடக்கும் விபத்து மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்தாமல் இருப்பது ஆகிய பல செயல்களை செய்யாமல் இருக்கிறார்கள். அதே நேரத்தில் மத்திய அரசு கொடுக்கும் நிதியை மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தாமல் அந்த நிதியை திரும்ப அனுப்பும் செயல்கள் தான் நடந்து கொண்டிருக்கிறது. இதை சட்டப்பேரவை சபாநாயகர் அவர்கள் வேதனையுடன் கண்டித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் தலைமை செயலகத்தை விட்டு வெளியே வந்து அவரவர் துறை சார்ந்த அலுவலகத்திற்கு வந்து மக்களை சந்திக்க வேண்டும். அதேபோல மக்கள் வாழும் பகுதிகளுக்கு வந்து துறை சார்ந்த திட்டங்கள் முறையாக நடைபெறுகிறதா என்று பார்க்க வேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தில் 15க்கும் மேற்பட்ட IAS அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் பல துறைகளில் செயலாளர்களாகவும் உள்ளனர். அந்தெந்த செயலாளர்கள் அவர்கள் துறை சார்ந்த செயல்பாடுகளில் போதிய கவனம் செலுத்தாததால் பல துறைகளில் மக்கள் நல திட்டப் பணிகள் தோய்வடைந்து முடங்கி கிடக்கிறது. இப்படி மக்கள் நல பணிகள் பாதகிக்கப்படுவதால் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளிலும் ஏராளமான வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது. இப்படி பல துறைகளில் முடங்கி உள்ள வளர்ச்சி பணிகளை செய்ய சட்டமன்ற உறுப்பினராகிய நாங்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு செயல்படுத்த வேண்டிய பல்வேறு நலத்திட்டங்களை பற்றி பேச வேண்டுமென நினைத்து காலை நேரங்களில் ஆலோசனை மேற்கொள்ள துறை சார்ந்த அதரிகாரிகளை நேரிலோ, தொலைபேசியிலோ அழைக்கும் போது அதிகாரிகள் நாங்கள் தலைமை செயலரிடம் ஆலோசனை கூட்டத்தில் உள்ளோம் எனவும், செயலர்களிடம் ஆலோசனையில் உள்ளோம் என அந்தந்த துறை சார்ந்த தலைவர்கள் மற்றும் இயக்குநர்கள் கூறி வருகிறார்கள். குறிப்பாக தலைமை செயலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் வரை அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் இருப்பதாக கூறுகிறார்கள். அதுவும் வாரத்தின் துவக்க நாளான திங்கள் கிழமை காலை 10.00 மணிக்கெல்லாம் தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடப்பதால் சட்டசபையில் முதல்வரோ, அமைச்சர்களோ அந்தெந்த துறை சார்ந்த செயலர் மற்றும் அதிகாரிகளை அவசர ஆலோசனைக்கு அழைக்கும் போது அவர்களிடமும்; தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டத்தில் உள்ளதாக கூறுவதால் மக்களுக்கான அவசர பணிகள் உடனே நிறைவேற்ற முடியாமல் காலதாமதம் ஆகிறது.
இப்படி அதிகாரிகளுக்குள் நடத்தும் ஆலோசனை கூட்டங்களால் எந்தவொரு பயனும் இல்லை, மக்களால் தோந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கூட்டும் ஆலோசனை கூட்டங்களில் கலந்து கொள்வதால் மட்டுமே மக்களின் பிரச்சனைகளை அறிந்து மக்கள் நல பணிகளை செய்ய முடியும். எனவே தலைமை செயலர் அவர்கள் இதை கருத்தில் கொள்ள வேண்டும். தலைமை செயலகத்தில் காலை வேளையில் நடக்கும் ஆலோசனை கூட்டங்களை மதியம் 2 மணிக்குமேல் நடத்த வேண்டும். அதேபோல துறை சார்ந்த தலைவர்கள் மற்றும் இயக்குநர்கள் அந்தந்த துறைகளில் காலை வேளைகளில் கட்டாயம் அலுவலகத்தில் பணியில் இருந்து மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது தீர்வு காண உத்தரவிட வேண்டும் என்று இதன் மூலம் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக