புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,
புதுச்சேரியை ஆளும் என்ஆர்.காங்கிரஸ் அரசு தொடர்ந்து மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. புதுச்சேரியை ஆளும் முதலமைச்சர் மக்களுக்கு கடுகளவு நல்லது செய்துவிட்டு, முழு பூசணிக்காயை மறைக்கும் அளவுக்கு ஊழலை அரங்கேற்றம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
புதுச்சேரி மக்களின் வரிப்பணத்தில் சம்பாதித்த 10 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களுடன் மின்துறை லாபகரமாக இயங்கி வருகிறது. இதனை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு. ஆனால் புதுச்சேரி மின்துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் அனைத்து முயற்சிகளையும் முதலமைச்சர் மேற்கொண்டுள்ளார். தொழிலாளர்களின் எண்ணத்திற்கு விரோதமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என சொல்லிக்கொண்டே, தனியார்மய வேலைகள் தொடங்கி டெண்டர் விடப்பட்டது. இதனால் தொழிலாளர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கு உள்ளதால் தனியார்மய டெண்டர் திறக்கப்படாமல் உள்ளது. விரைவில் இதற்கு தீர்வு கண்டு தனியாரிடம் மின்துறையை புதுச்சேரி அரசு ஒப்படைக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
இந்நிலையில் மாபெரும் இமாலய ஊழலுக்கு முதலமைச்சரும், மின்துறை அமைச்சரும் கைகோர்த்துள்ளனர். மத்திய அரசிடம் சுமார் ரூ.251 கோடி கடனாக பெற்று முன்கூட்டியே கட்டணம் செலுத்த வேண்டிய ப்ரீபெய்டு மீட்டர் பொருத்தும் பணிக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இந்த தொகையை புதுச்சேரி மக்கள் வரிப்பணத்திலிருந்து வரும்காலத்தில் புதுச்சேரி அரசு திருப்பி செலுத்த உள்ளது. மின்துறையை தனியாரிடம் ஒப்படைக்க முடிவெடுத்துவிட்டு, அவசரகதியில் மக்கள் வரிப்பணத்தில் மீட்டரை மாற்ற ஒப்பந்தம் போட வேண்டிய அவசியம் என்ன?மாபெரும் இமாலய ஊழலை திட்டமிட்டு நடத்தவே இந்த ஒப்பந்தம் போட்டுள்ளனர். வரவிருக்கும் புதுச்சேரி மின்துறை தனியார் நிறுவன முதலாளிக்காகவே மக்கள் வரிப்பணம் ரூ.251 கோடி செலவிடப்படுகிறது. இந்த நிதி மாற்று வழியில் இணைந்த கைகளுக்குத்தான் திரும்பும் என புதுச்சேரி அரசு பதவியில் உள்ள உயர் அதிகாரிகளே வேதனை தெரிவிக்கின்றனர்.
விஞ்ஞானரீதியில் மாபெரும் ஊழலுக்கு வழி வகுக்கும் இத்திட்டத்தை உடனடியாக புதுச்சேரி முதலமைச்சர் மற்றும் மின்துறை அமைச்சர் கைகோர்த்து, கைவிட வேண்டும் என அதிமுக சார்பில் வலியுறுத்துகிறோம். இந்த மாபெரும் இமாலய விஞ்ஞானரீதியிலான ஊழலை எதிர்த்து கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளர், மாண்புமிகு எதிர்கட்சித்தலைவர், அன்பிற்கும், பாசத்திற்கும் உரிய அண்ணன் திரு.எடப்பாடியார் அவர்களின் அனுமதி பெற்று சட்ட போராட்டங்களை அதிமுக முன்னெடுக்கும் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்கிறோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக