புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் ஏனாமில் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் கோலப்பள்ளி ஸ்ரீநிவாச அசோக்குடன் சந்திப்பு:
புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன், ஏனாமில் மக்கள் நலத்திட்டங்களுக்காக 4 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்திய சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் கோலப்பள்ளி ஸ்ரீனிவாச அசோக் அவர்களை, இன்று 10.1.2023 செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு சந்தித்து பேசினார். சுயேச்சைசட்டமன்ற உறுப்பினர் திரு.கோலப்பள்ளி ஸ்ரீனிவாச அசோக் அவர்களின் போராட்டம், கோரிக்கைகள் வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
பின்னர் ஏனாமில் புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் நிருபர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் ஏனாம் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் அசோக்கிற்கு வாழ்த்து தெரிவிக்க வந்துள்ளேன். மக்கள் நலனுக்காக போராடுபவர்களை அம்மாவின் வழியில் கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளர் அன்பிற்கும், பாசத்திற்கும் உரிய அண்ணன் திரு.எடப்பாடியார் அவர்கள் வாழ்த்துவார்கள், வரவேற்பார்கள். அவர்களின் வழியில் நானும் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட அசோக்கை சந்தித்து கோரிக்கைகள் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்துள்ளேன்.
முதல்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள அசோக், பலமுறை அமைச்சராக இருந்தவரின் ஆதரவுடன் போட்டியிட்ட முதலமைச்சரை வெற்றி பெற்றுள்ளார். இதற்கு ஏனாம் தொகுதி மக்கள் அசோக் மீது வைத்திருந்த நம்பிக்கைதான் காரணம். மக்கள் பிரதிநிதிதான் சட்டமன்ற உறுப்பினர். தேர்தலோடு வெற்றி, தோல்வி முடிந்துவிட்டது. தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சர் அனைத்து தொகுதிகளையும் பாரபட்சமின்றி கவனித்து, நலத்திட்டங்களை வழங்க வேண்டும். ஆனாமில் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏவை செயல்படவிடாமல் தடுக்கின்றனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஏனாம் தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு தயங்குகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஏனாமிற்கு வந்த முதலமைச்சர் ரங்கசாமி, நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியாததற்கு புதுச்சேரிக்கு முழு அதிகாரம் இல்லாததுதான் காரணம் என தெரிவித்துள்ளார். முழு அதிகாரம் இல்லாவிட்டால் முதலமைச்சர் பதவியில் ஏன் நீடிக்க வேண்டும்? மதுபான ஆலைகள், கவர்ச்சி நடன பார்களுக்கு அனுமதி வழங்க அதிகாரம் உள்ளது. மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற அதிகாரம் இல்லையா?
சூதாட்ட விடுதிகளே இருக்கக்கூடாது என்பதுதான் அரசின் எண்ணம் என ரங்கசாமி தெரிவித்துள்ளார். சட்டசபைக்கு அருகிலேயே மிகப்பெரும் சூதாட்ட கிளப் நடந்து வருகிறது. அதுவே அவரின் கண்களுக்கு தெரியவில்லை.
ஏனாமில் ஏழைகளின் வருமானத்தை சூதாட்ட கிளப் நடத்தி சுரண்டி வருகின்றனர். இவற்றை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்ற அசோக் எம்எல்ஏ கோரிக்கை நியாயமானது. புதுவையில் ரெஸ்டோ பார் எனப்படும் கவர்ச்சி நடன பார், மதுபான ஆலைக்கு எதிராக நாங்கள் போராடி வருகிறோம். அதேபோல ஏனாமில் சூதாட்டத்தை எதிர்த்து அசோக் போராடி வருகிறார்.
கடந்த கால ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் என்ற போர்வையில் மிகப்பெரும் ஊழல் முறைகேடு நடந்துள்ளதால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் அசோக் கோரிக்கை வைத்துள்ளார். அவரின் கோரிக்கை நியாயமானது. அவரின் கோரிக்கையை ஏற்று மேதகு துணை நிலை ஆளுநர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
மக்களுக்காக நடைபெறும் போராட்டங்கள் என்றுமே தோல்வியை சந்தித்தது கிடையாது. எங்கள் போராட்டத்தை பற்றி மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். எந்தவித மிரட்டலுக்கும் அஞ்சாமல் நாங்கள் மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்துச்செல்வோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக