புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,,
புதுச்சேரி மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சராக நல்லாட்சி நடத்தி வரும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ரங்கசாமி அவர்களைப் பற்றி ஏனம் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் கொல்லப்பள்ளி திரு.அசோக் அவர்கள் திமீர் தனத்தில் அவமதிக்கும் வண்ணம் பேசியது கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.
கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு தனது தொகுதியில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து மலிவு விளம்பரத்திற்காக சட்டமன்ற வாசற்படியில் அமர்ந்து ஒரு உண்ணாவிரத போராட்டத்தை சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் நடத்தினார். அப்பொழுது அவரை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நேரில் அழைத்து எதற்கு உண்ணாவிரதப் போராட்டம் உங்கள் பிரச்சனை என்ன என்பதை கேட்டு அறிந்தார்.அது சம்பந்தமாக உரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்றைய தினம் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பகிரங்கமாக மேடை போட்டு பேசும்பொழுது வரும் எட்டாம் தேதி ஏனத்தில் நடைபெறும் கலை விழா நிறைவு நாள் விழாவிற்கு வரும் மாண்புமிகு முதலமைச்சர் மீது தொகுதி மக்கள் செருப்பை வீசுவார்கள் என்று அவதூறாக பேசியுள்ளார்.
தனது தொகுதியில் திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்றால் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் உள்ளனர். தான் ஆதரிக்கும் கட்சியான பிஜேபி கட்சி சம்பந்தப்பட்ட சபாநாயகர் மற்றும் பிஜேபி சார்ந்த அமைச்சர்கள் உள்ளனர். அவர்களிடம் எடுத்துக் கூறலாம். அல்லது தலைமைச் செயலர், துணை நிலை ஆளுநர் அவர்களிடம் பிரச்சினையை கூறலாம். இவை எதையும் செய்யாமல் தனது வயது. தனது உயரம், தனது தகுதி என்னவென்று கூட தெரியாமல் மதிப்புமிக்க மாண்புமிகு முதலமைச்சர் மீது தனது தொகுதி மக்கள் செருப்பை வீசுவார்கள் என்று பேசுவது ஆணவத்தின் உச்சகட்டமாகும்.மாண்புமிகு முதல்வருக்கு எதிராக திட்டமிட்டு அந்த தொகுதியில் கலவரத்தை ஏற்படுத்தி மக்களை தூண்டி விடுவதாக தெரிகிறது.
பிஜேபி அரசுக்கு ஆதரவளிக்கும் இந்த சுயேட்சை சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவை பிஜேபி விலகிக் கொள்ள வேண்டும். சட்டம் ஒழுங்கு சீர்குலையும் விதத்தில் பேசியுள்ள ஏனம் சட்டமன்ற உறுப்பினர் மீது காவல்துறை டிஜிபி அவர்கள் உரிய விசாரணை நடத்தி அவர் இவ்வாறு பேசியது உண்மை என்றால் அவர் மீது உரிய வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் மீது 900 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினர் மக்கள் முதல்வர் மீது செருப்பை வீசுவார்கள் என்று பேசிவிட்டு புதுச்சேரிக்கு அதே சட்டமன்ற உறுப்பினர் இங்கு வரும் பொழுது அவரது நிலை என்னவாகும் என்பதை காவல்துறை உணர்ந்து எதிர்காலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையாத விதத்தில் உடனடி நடவடிக்கையை சம்பந்தப்பட்ட சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் கொல்லப்பள்ளி திரு.அசோக் மீது உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக