அதிமுக மாநில செயலாளர்(மேற்கு) ஓம்சக்தி சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மக்கள் அன்றாடம் பயன்பெற கூடிய துறைகளில் உள்ளாட்சி துறை முக்கியமான ஒன்று ஆகும். வீட்டு வரி,பிறப்பு ,இறப்பு பதிவு செய்தல்,பதிவு திருமணம் போன்ற பல மக்களின் அத்தியாவசிய பணிகள் உள்ளாட்சி துறைக்கு உட்பட்ட நகராட்சி,மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் நடைபெற்று வருகின்றன.இப்படி மக்களின் அன்றாட அத்தியாவசிய துறையான உள்ளாட்சி துறையில் பல பணியிடங்கள் நீண்ட காலமாக நிரப்ப படாமல் உள்ளதால் மக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.குறிப்பாக பிறந்த பதிவில் பெயர் மாற்றம்,பெயர் திருத்தம் போன்ற சிறு நடவடிக்கைகள் மேற்கொள்ள குறைந்தது மூன்று மாத காலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.குறிப்பாக மாணவர்களின் மாற்று சான்றிதழில் பெயர் திருத்தம் செய்ய பிறப்பு சான்றிதழில் ஏதேனும் சிறு திருத்தம் செய்ய பதிவாளர் அலுவலகத்தை நாடும் போது சொல்ல முடியாத துயரங்களை பொதுமக்கள் சந்திக்க வேண்டி உள்ளது.மேலும் தேவை இல்லாத அலைக்கழிப்பு ஏற்பட்டு மக்களிடையே ஒரு வித வெறுப்புணர்வு ஏற்பட்டு அன்றாடம் பொது மக்களுக்கும் நகராட்சி ஊழியர்களுக்கும் சண்டை ஏற்படுகிறது.இது சம்பந்தமாக அதிகாரிகள் மட்டத்தில் விசாரிக்கும்போது நீண்ட காலம் காலி பணியிடங்கள் நிரப்ப படாமல் உள்ளதே காரணம் என்கின்றனர்.குறிப்பாக புதுவை நகராட்சி பிறப்பு இறப்பு பதிவாளர் அலுவலகத்தில் 33 பேர் பணியாற்ற வேண்டும் ஆனால் மாறாக தற்போது 9 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இந்தப் பணியிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருப்பது வேதனைக்குரியது. இதே போல உழவர்கரை நகராட்சி மற்றும் புதுச்சேரியில் உள்ள பல்வேறு கொம்யூன் பஞ்சாயத்துக்களிலும் இதே போன்ற நிலை இருந்து வருகிறது. பொதுமக்களின் அன்றாட மற்றும் அத்தியாவசிய தேவைகளில் இருந்து வரும் உள்ளாட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதுச்சேரி முதல்வர் சிறப்பு கவனம் செலுத்தி காலி பணியிடங்களை நிரப்ப விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக