ஆதிதிராவிடர் மக்கள் பெற்ற அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்; சுயேச்சை எம்எல்ஏ அரசுக்கு வேண்டுகோள்..!
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ நேரு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
புதுச்சேரி மாநிலத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், ஊக்கப்படுத்தவும், மேம்படுத்தவும் அவர்களின் கல்வி மற்றும் சுய வேலை வாய்ப்புக்கான நிதி ஆதாரங்களை அளிக்கும் விதமாக ஆதிதிராவிடர் - பழங்குடியினர் மேம்பாட்டுக் கழகத்தின் மூலமாக மானியத்துடன் கூடிய கடன்கள் வழங்கப்பட்டு வந்தது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கொரோனா ஊரடங்கால் தனியார் துறையிலும், சுயதொழிலும் செய்து வந்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு பேட்கோ மூலம் பெற்ற கடன்களை திரும்ப செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஆகையால் ஆதிதிராவிடர் மக்கள் பெற்ற அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் கடந்த 5 ஆண்டுகளாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மேம்பாட்டுக் கழகத்துக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் பேட்கோ மூலம் வழங்கப்பட்டு வந்த மானிய கடன்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆதிதிராவிடர் மக்கள் சுயத்தொழில் தொடங்கவும் அவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ளவும் புதிதாக மேற்கண்ட துறை மூலம் எந்த கடனும் பெற முடியாத நிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள். ஆகையால் ஆதிதிராவிடர் மக்களுக்காக ஒதுக்கப்படும் சிறப்பு கூறு நிதியிலிருந்து 25 கோடி ரூபாய் பணம் ஒதுக்கி புதிதாக கடன் பெறுவதற்கு தேவையான நடவடிக்கையினை எடுத்து மேற்கண்ட துறையின் மூலம் பயனாளிகள் பயன்பெற ஏதுவாக மானிய கடன்கள் கொடுத்து உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக