தொடர்ந்து பறிக்கப்படும் மாநில உரிமைகள்; அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தல்..!
புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் அவர்கள் இன்று தலைமை கழகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கடந்த திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் முன்னாள் முதல்வர் நாராயணசரியின் மலிவு விளம்பரம் மோதல் காரணமாக பறிபோன மாநில உரிமைகள் தற்போதைய ஆட்சியிலும் தொடர்வது வருத்தம் அளிக்க கூடிய ஒன்றாகும். கடந்த திமுக காங்கிரஸ் ஆட்சியில் பல விதத்திலும் பறிபோன மாநில உரிமைகள் மீட்டெடுக்கப்படும் என்ற நம்பிக்கையில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் வாக்களித்து ஆட்சியை கொடுத்துள்ளனர். கடந்த ஆட்சியில் பறிபோன மாநில உரிமைகளை பெற்றுத்தருவது மக்களின் நம்பிக்கையை பெற வேண்டியது மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சியான பாஜகவின் கடமையாகும். ஆனால் அனைத்து விஷயங்களிலும் தொடர்ந்து மாநில உரிமைகள் பறிபோவது எதிர்கால புதுச்சேரிக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.
மத்திய நிதி குழுவில் புதுச்சேரி மாநிலம் இதுவரை சேர்க்கப்படாதது, மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து பாட பிரிவுகளிலும் நம் மாநிலத்திற்கு உரிய 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படாதது. ஜிப்மர் வேலை வாய்ப்பில் நம் மாநிலத்திற்கு தனி இடஒதுக்கீடு வழங்காதது. புதுச்சேரியில் தனி தேர்வாணையம் இல்லாததால் குரூப் ஏ மற்றும் குரூப் பி ஆகிய பிரிவுகளில் மருத்துவர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி முதல்வர்கள், மருத்துவர்கள், பிசிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளுக்கு அகில இந்திய அளவில் மத்திய தேர்வாணையம் மூலம் நிரப்பப்படுவதால் வடமாநிலத்தை சேர்ந்தர்கள் இந்த பதவிகளில் நிறைந்துள்ளனர்.
புதிய அரசு பதவியேற்றவுடன் அரசின் எண்ணத்திற்கு ஏற்ப செயல்படும் அரசு வழக்கறிஞர்கள் புதியதாக நியமிக்கப்படுவது வழக்கமான ஒன்றாகும். ஆனால் புதிய அரசு பதவியேற்று ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு அரசு வழக்கறிஞர்கள் தேர்வு மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு வழக்கறிஞர்கள் நியனம் என்பது எந்த மாநிலத்திலும் தேர்வுகள் மூலம் நியமிக்கப்படுவது இல்லை. அடாக் அடிப்படையில் நியமிக்கும் பதவியாகும். அப்படி நிரப்பப்படாமல் தேர்வு நடத்தி அதற்குரிய மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படாமல் தேர்வு எழுதி 7 மாதத்திற்கு பிறகு புதுச்சேரி வழக்கறிஞர்கள் மட்டுமல்லாமல் சென்னை மற்றும் டெல்லியில் உள்ள வழக்கறிஞர்களும் புதுச்சேரி அரசின் வழக்கறிஞர்களாக தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திலும் நம் மாநில உரிமை பறிக்கப்பட்டுள்ளது.
மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டியது ஆளும் அரசின் கடமையாகும். தற்போது உள்ள அரசு மாநில உரிமையை மீட்டெடுக்கும் என்ற மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில கழக பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பாப்புசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக