கனரா வங்கி சார்பில்,கனரா வித்யா ஜோதி திட்டத்தின் கீழ் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி கல்வித்துறை வளாகத்தில் நடைபெற்றது.
கனரா வங்கி மேலாளர் தலைமையில் நடைபெற்ற விழாவில் கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு முன்னிலை வகித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா ஆகியோர் கலந்து கொண்டு 117 மாணவிகளுக்கு ஊக்கத்தொகை ஆணையை வழங்கி சிறப்பித்தனர்.
அதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர் நமச்சிவாயம்,
நாட்டிலேயே புதுச்சேரி மாநிலம் கல்வியில் 2-வது இடத்தில் உள்ளதாகவும், மத்திய அரசின் தூய்மைக்கான தேசிய விருது புதுச்சேரியை சார்ந்த 6 பள்ளிகளுக்கு கிடைத்துள்ளதாகவும், அதில் 5 அரசு பள்ளி என்பதில் பெருமை ஆக உள்ளது என தெரிவித்தார்.
புதுச்சேரி மாநிலத்தில் கல்வித்துறையை மேம்படுத்தும் வகையில், நிதிநிலை அறிக்கையில் சுமார் ஆயிரத்து நூற்று அறுபது கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு சிறப்பு கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்த அவர்,வெகு விரைவில் மாணவர்களுக்கு சீருடை வழங்க உள்ளதாகவும்,கடந்த கால ஆட்சியில் நிறுத்தப்பட்ட விலையில்லா சைக்கிள், மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
பல்வேறு தரப்பினரின் கோரிக்கையான, மாணவர்களுக்கான ஒரு ரூபாய் பேருந்து திட்டம்,இனி இலவசமாக வழங்கப்பட உள்ளதாகவும், போக்குவரத்துதுறை அனுமதியுடன் 36 பேருந்துகள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்த அமைச்சர், இதற்காக 75 பேருந்துகளை சரி செய்யும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி வகுப்புகளையும் ஸ்மார்ட் வகுப்புகளாக மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும், ஆசிரியர் பற்றாக்குறையை நிரப்ப அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளதாக கூறினார்.
மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு தரமாக இல்லை என பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து, தரமான உணவு வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும், தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளை தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
இந்நிகழ்ச்சியில் கனரா வங்கி அதிகாரிகள், பாஜக பட்டியலணி மாநில தலைவர் தமிழ்மாறன், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
கருத்துகள்
கருத்துரையிடுக