புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla.,வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,
‘ஆடு நனைகிறதே என ஓநாய்’ பரிதாபப்பட்ட கதையாக கூட்டுறவு நிறுவனங்கள் மீது மாண்புமிகு முதலமைச்சருக்கு திடீர் கரிசனம் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு கூட்டுறவு நிறுவனங்கள், சங்கங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து, மூடு விழாவை நோக்கி சென்றதற்கு கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரிந்த தொழிலாளர்கள்தான் என தனது அரிய கண்டுபிடிப்பை மாண்புமிகு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
உண்மையில், மனசாட்சி இருந்தால் மாண்புமிகு முதலமைச்சர் தனது நெஞ்சில் கை வைத்து கூட்டுறவு நிறுவனங்களின் நஷ்டத்திற்கு தொழிலாளர்கள்தான் காரணம் என கூற முடியுமா? அவரின் கடந்தகால ஆட்சியில் அளவுக்கு அதிகமாக ஆட்கள் திணிப்பு, அதிகாரிகளின் மெத்தனம், தனது வாரிசுக்கு வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டது. இவர்களின் கூட்டு கொள்ளையே வீழ்ச்சிக்கு காரணம் என கூட்டு நிறுவன தொழிலாளர்களே குற்றம்சாட்டினர். லாபத்தில் இயங்கிய கூட்டுறவு நிறுவனங்கள், சங்கங்களின் வீழ்ச்சிக்கு யார் காரணம்? என உண்மையை அறிந்துகொள்ள சிபிஐ விசாரணை நடத்த மாண்புமிகு முதலமைச்சர் தாமாக முன் வருவாரா? இந்த விசாரணை நடத்தப்பட்டால் பலரின் போலி முகத்திரை கிழியும்.
கூட்டுறவு நிறுவனங்கள் வீழ்ச்சியை சந்திக்க ஆட்சியில் இருந்தவர்களே காரணம். இதைப்பற்றி ஒன்றும் அறியாத அப்பாவி தொழிலாளர்கள் அரசியல் சதிவலையில் சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றனர். அப்பாவி தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கணக்கில் சம்பள பாக்கி உள்ளது. தொழிலாளர்களின் குடும்பம் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி சீரழிந்து வருகிறது. இதனால் பல தொழிலாளர்கள் தற்கொலை செய்துள்ளனர். இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, புதுச்சேரி அரசின் அனைத்து கூட்டுறவு நிறுவனங்களுக்கும் சொந்தமான 100க்கும்
மேற்பட்ட ரூ.500 கோடி மதிப்புள்ள மதுபான கடைகளை ரூ.150 கோடிக்கு தனியார் முதலாளிகளுக்கு சாதகமாக தாரை வார்க்க தற்போது தயாராகி வருகின்றனர்.
தமிழகத்தில் எந்த ஆட்சி நடந்தாலும் டாஸ்மாக் மூலம் அரசு அதிகாரிகள் ரூ.பல ஆயிரம் கோடி லாபம் ஈட்டுகின்றனர். ஆனால் சிறிய மாநிலமான புதுச்சேரியில் அரசு மதுபான கடைகள் நஷ்டத்தில் இயங்க காரணம் என்ன? புதுச்சேரி அதிகாரிகளுக்கு நிர்வாக திறமை இல்லையா? அல்லது துறையை நிர்வகிக்கும் அரசியல்வாதிக்கு திராணியில்லையா?
புதுச்சேரி அரசு மதுபானகடைகள் தனியார்மயமாக்கப்பட்டால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். எனவே புதுச்சேரி அரசு தனியார்மயத்தை கைவிட்டு சிறந்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து மதுபான கடைகளை திறம்பட செயல்படுத்தி லாபத்தை ஈட்டி, தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் கட்சித்தலைமை அனுமதி பெற்று அதிமுக சார்பில் அரசு மதுபான கடைகளை தனியாருக்கு தாரை வார்ப்பதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடுவோம்.
மதுபான கடைகள் தனியாருக்கு சென்றால் அதில் கிடைக்கும் வருவாயை வைத்து தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஆண்டுக்கணக்கான சம்பளத்தில், ஒரு சில மாத சம்பளத்தை மட்டுமே வழங்குவர். எதிர்காலத்தில் நிரந்தர வேலையும், நிலுவை சம்பளமும் கேள்விக்குறியாகும். கூட்டுறவு நிறுவனங்களை வைத்து பின்னப்படும் அரசியல் சதிவலைகளை முறியடிக்க தொழிலாளர்கள் மத்தியில் முதலில் ஒற்றுமை ஏற்பட வேண்டும். கூட்டுறவு நிறுவன தொழிலாளர்கள் தங்களை அரசு ஊழியர்களாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்துச்செல்ல வேண்டும்
கருத்துகள்
கருத்துரையிடுக