புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் இன்று (13-11-2022) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 10 தினங்களாக விட்டு விட்டு பெய்து வரும் தொடர் மழையினால் புதுச்சேரி மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நடைபாதை வியாபாரிகள், மீனவர்கள், மீன் விற்பனை செய்யும் பெண்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், கட்டிடம் சார்ந்த தொழில் புரிவோர்கள், துப்புரவு பணியாளர்கள், விவசாய கூலி தொழிலாளர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அன்றாடம் தொழில் புரிந்து அதில் வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வரும் சிறிய வியாபரிகளும் மிகுந்த துயரத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
தொடர் பெரு மழையால் பாதிக்கப்பட்டுள்ள மேற்கூறிய பிரிவுகளில் தொழில்புரிந்து பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களின் குடும்பத்தாருக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ரூ.5000 மழைக்கால நிவாரண உதவியாக வழங்க வேண்டும். இந்த மழைக்கால நிவாரண உதவி என்பது அன்றாட தினசரி தொழில்புரிந்து பாதிக்கப்பட்டுள்ள உண்மையான தொழிலாளர்கள் குடும்பத்திற்கு மட்டும் கிடைக்க அரசு உறுதி செய்ய வேண்டும்.
புதுச்சேரி நகர் பகுதி முழுவதும் சமீபகாலத்தில் போடப்பட்ட தார் சாலைகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. தகுதியற்ற பல ஒப்பந்ததாரர்களுடன் பொதுப்பணித்துறை, உள்ளாட்சி துறையில் உள்ள சம்பந்தப்பட்ட சில அதிகாரிகள் தவறான தொடர்பு இதற்கு முதல் காரணமாகும். மக்களின் வரிப்பணத்தில் இருந்து போடப்படும் சாலைகள் குறைந்தது 3 ஆண்டுகளுக்குள் சேதம் அடைகிறது என்றால் அந்த சாலை தகுதியற்ற முறையில் போடப்பட்டுள்ளது. இவ்வாறு போடப்படும் சாலைகள் சேதமடைவது அரசு துறையில் பணிபுரியும் அதிகாரிகளின் அலட்சியப்போக்கே முதல் காரணமாகும்.
நகரப் பகுதியில் சேதம் அடைந்துள்ள சாலைகள் ஆங்காங்கே குண்டும் குழியுமாக சேதாரம் அடைந்து அதில் தண்ணீர் தேங்கி நிற்கும் போது இருசக்கர வாகன ஓட்டிகள் அதில் தொடர்ந்து விபத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதுபோன்ற பழுதடைந்த சாலைகளை ஒன்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்ததாரரை அழைத்து அவர்களது சொந்த செலவில் சாலைகளை பேட்ச் ஒர்க் செய்ய அரசு உத்தரவிட வேண்டும். அவ்வாறு செய்ய மறுக்கும் ஒப்பந்ததாரர்களின் உரிமையை அரசு ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக