கடந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் பெறப்பட்ட கட்டணத்தையே இவ்வாண்டும் பெற வேண்டும் என அரசு அறிவிக்க வேண்டுமென அதிமுக வலியுறுத்தல்!
புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற கட்சித் தலைவருமான அன்பழகன் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
புதுச்சேரி மாநிலத்தில் தங்களது பிள்ளைகள் தரமான கல்வி கற்க வேண்டும் என்ற பெற்றோர்களின் நியாயமான எண்ணத்தை பல தனியார் பள்ளிகள் பணமாக மாற்றம் செய்து வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலத்தைப் பொருத்தமட்டில் நீண்ட நெடுநலாக தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்யவில்லை. ஒவ்வொரு தனியார் பள்ளிகளும் மனம்போன போக்கில் அதிகப்படியான கல்வி கட்டடத்தை வசூல் செய்து வந்தன. தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்ய வேண்டுமென அதிமுக தொடர்ந்து வலியுறுத்தியதின் அடிப்படையில் கடந்த திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டணத்தை நிர்ணம் செய்தனர். அவ்வாறு நிர்ணம் செய்யும் போது ஒட்டுமொத்த தனியார் பள்ளிகளுக்கும் அந்தந்த படிப்புகளுக்கு தகுந்தார்போல் சீராண கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்யாமல் தனியார் பள்ளிகளின் விருப்பத்திற்கு ஏற்றார்போல் நிர்ணயம் செய்தனர்.
உதாரணத்திற்கு ஒரு சில தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜிக்கு ஆண்டு கட்டணம் 10 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்துள்ள நிலையில், அதே எல்.கே.ஜி., யு.கே.ஜிக்கு பல தனியார் பள்ளிகளில் ஆண்டுக்கு ரூ.40,000 மற்றும் ரூ.50,000 என நிர்ணயம் செய்து மக்களை கடந்த திமுக காங்கிரஸ் அரசு வஞ்சித்தது.
தற்பொழுது 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்துள்ளது. கடந்த ஆண்டை விட 10 சதவீதத்திலிருந்து சுமார் 40 சதவீதம் வரை பள்ளிகளுக்கு தகுந்தார் போல் கட்டண உயர்வை குழுவின் பரிந்துரைப்படி அரசு அப்படியே ஏற்றுள்ளது தவறான ஒன்றாகும். கடந்த காலங்களில் மாதா மாதம் கல்வி கட்டணம் பெற்று வந்ததை நான்கு பருவங்களாக பிரித்து அதிகப்படியான கட்டணத்தை தனியார் பள்ளிகள் வசூல் செய்துகொள்ள அரசு நிர்ணயம் செய்துள்ளது.
கல்வி கட்டணம், Terms கட்டணம் என்ற பெயரில் கட்டணத்தை அரசு அறிவித்துள்ளது. இதில் பஸ் கட்டணம், லேப் கட்டணம், யூனிபார்ம், புத்தக விலைகள், Library கட்டணம், விளையாட்டு கட்டணம் என பல்வேறு தலைப்புகளில் தனியார் பள்ளிகளே கட்டணத்தை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது மாணவர்களை ஏமாற்றும் செயலாகும். இதன் மூலம் அதிகப்படியான தொகையை மாணவர்களிடம் இருந்து தனியார் பள்ளிகள், வசூல் செய்வதற்கு அரசே அனுமதியளித்துள்ளதாக தெரிகிறது.
அட்மிஷன் கட்டணம் பெறக்கூடாது என்ற அரசின் அறிவிப்பும் சில தனியார் பள்ளிகள் காற்றில் பறக்க விட்டு பெற்றோர்களிடம் புதிது புதிதாக எதாவது ஒரு பெயரில் கட்டணத்தை வசூல் செய்வார்கள். எத்தனையோ தனியார் பள்ளிகள் இன்னமும் குறைந்த கட்டணத்தில் நல்ல தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர். ஆனால் ஒரு சில தனியார் பள்ளிகள் தங்களது உள்கட்டமைப்புகளை மேம்படுத்திக்கொண்டு மாணவர்களிடம் கசக்கி பிழிந்து அதிகப்படியான கட்டணத்தை வசூல் செய்து வருகின்றனர்.
இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வுகாண அரசு பள்ளிகளின் தரத்தை அரச உயர்த்த வேண்டும். முதலில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பிள்ளைகளை அரசு பள்ளியில் கட்டாயமாக சேர்க்க வேண்டும் என்ற அரசாணையை அரசு வெளியிட வேண்டும். அவ்வாறு செய்தால் தான் அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும். தரமான கல்வி மாணவர்களிடம் போதிக்கப்படும். அரசு பள்ளிகளின் தரம் திட்டமிட்டு குறைய குறைய தனியார் பள்ளிகளின் மோகம் பெற்றோர்களிடம் அதிகம் ஏற்படுகிறது.
புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை முழுக்க முழுக்க கல்வி வர்த்தக வியாபாரமாக மெல்ல மெல்ல மாற்றப்பட்டு வருவதை தடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும், துணைநிலை ஆளுநருக்கும் உண்டு. தமிழகத்தில் அரசு பள்ளியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதத்தில் அரசு பள்ளியில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை மருத்துவ கல்வியில் மாண்புமிகு தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் வழங்கினார். அதன் மூலம் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கைகள் அதிகப்படுத்தப்பட்டு வருகின்றது. புதுச்சேரியில் ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் விதத்தில் கல்வி உரிமை சட்டத்தையும் அமல்படுத்தவில்லை. அதே போன்று ஏழை எளிய நடுத்தர கிராமப்புற மாணவர்களின் நலன் காக்க அரசு பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது போன்று 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டையும் அரசு இன்றுவரை அமல்படுத்தாதது தவறான ஒன்றாகும். இதில் உள்ள உண்மை நிலையை உணர்ந்து மாண்புமிகு முதலமைச்சரும், மாண்புமிகு கல்வி அமைச்சரும் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணம் என்பது முறையற்ற முறையில் முடிவு செய்யப்பட்டு அதிகப்படியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது அறிவித்துள்ள தனியார் பள்ளி கல்வி கட்டண அறிவிப்பை முழுமையாக ரத்து செய்துவிட்டு கடந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் பெறப்பட்ட கட்டணத்தையே இவ்வாண்டும் பெற வேண்டும் என அரசு அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள்
கருத்துரையிடுக