பெருமழையை கருத்தில் கொண்டு அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வேண்டும் என அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்
புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக பகுதியில் ஒரு சில மாவட்டங்களில் இன்று கன மழை பெய்து வருகிறது. நவம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்ற அறிவிப்பை வானிலை அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் பெய்யப்படும் கனமழையை எதிர்கொள்ளும் விதத்தில் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி துறை ஆகியவை இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த இரு ஆண்டுகளாக அவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படாததால் நகரப் பகுதி முழுவதும் மழை நீர் தேங்கி மக்கள் சொல்லொன்னா துயரத்திற்கு ஆளாக்கப்பட்டனர்.இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலைகளில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. பெருமழையால் விழுந்த மரங்களை அப்புறப்படுத்த கூட உரிய மரம் வெட்டும் இயந்திரங்கள் இல்லாமல் துறை ஊழியர்கள் சிரமத்திற்கு ஆளாக்கப்பட்டனர்.
கடந்த ஆண்டு பெய்த பெருமழையால் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக கடற்கரைப் பகுதிகள், மக்கள் வசிக்கும் தாழ்வான பகுதிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
பெருமழையை கருத்தில் கொண்டு அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கும் விதத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித் துறை, காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை ஆகிய துறைகளின் உயர்மட்ட குழு கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் உடனடியாக கூட்ட வேண்டும்.
தாழ்வான மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகள்,அரசு பள்ளிகள், திருமண மண்டபங்கள், சமுதாயக்கூடங்கள் ஆகியவற்றின் இடங்களை குறிப்பிட்டு சில நாட்களுக்கு வருவாய் துறையினரிடம் ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெருமழையால் பாதிக்கப்படும் ஏழை, எளிய மக்களுக்கு உடனடி உணவு வழங்க அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக