மருத்துவ கல்லூரி உரிமையாளர்களுக்கு சாதகமாக செயல்படும் கட்டண நிர்ணயக்குழு..! தலைவரை மாற்ற அதிமுக போர்க்கொடி...!
புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் அவர்கள் இன்று தலைமை கழகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :
நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 500-க்கும் மேற்பட்ட பல பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த திமுக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களுக்கு சொத்துவரி, வீட்டு வரி, குடிதண்ணீர் வரி, மின் வரி என மக்கள் மீது பல வரிதிணிப்பை விதித்து மக்களை துயரத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில் ஆட்சியின் இயலாமையை மூடிமறைக்கவும், மக்களை திசை திருப்பும் வகையில் கடந்த 6 மாதகாலமாக ஜாதி மற்றும், மதத்தை கையில் எடுத்து மக்களை திசை திருப்ப திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுகவிற்கு உறுதுணையாக இருக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரின் செயல்களை மக்கள் புறக்கணித்துள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் மக்களை ஏமாற்ற நீர்த்துப்போன இந்தி திணிப்பு என்ற கோஷத்தை முன்வைத்து இந்தி எதிர்ப்பு என்ற போராட்டத்தை நடத்தியிருப்பது நாடகத்தனமான செயல் ஆகும். மத்தியில் திமுக கூட்டணியோடு காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது நாடுமுழுவதும் இந்தி மொழியை கொண்டு செல்லவும், இணைப்பு மொழியாக இந்தியை அனைத்து மாநிலங்களிலும் முழுமையாக கொண்டு வர பாராளுமன்றத்தில் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. நாடுமுழுவதும் இந்தி தான் முதன்மையான மொழி என்றும், நாடு முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல இந்தி அவசியம் என அப்போதைய முன்னாள் திமுகவை சேர்ந்த மத்திய அமைச்சர்களை மேடையில் வைத்துக்கொண்டே இந்தி மொழி விழாவில் பா.சிதம்பரம் பேசினார்.
பல மொழிகளை கற்று மாணவர்கள் பன்மொழி புலமை அடைவது என்பது அவசியமான ஒன்றாகும். மாணவர்கள் பன்மொழி திறமையை வளர்த்துக்கொள்ள நினைக்கும் இன்றயை காலத்தில் அவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் வகையில் இந்தியை கற்க கூடாது என நினைக்கும் திமுகவின் செயல் கண்டிக்கத்தக்கது.
நீட் தேர்வை ரத்து செய்யமுடியாது என்று தெரிந்தும் மாணவர்களை ஏமாற்றும் நோக்கில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று திமுக கூறிவருவது ஏமாற்றும் செயல். மத்தியில் திமுக ஆட்சியில் இருக்கும் போது ஒரு வேஷமும் ஆட்சியில் இல்லாத போது ஓரு வேஷமும் போட்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
நாடுமுழுவதும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவ நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள மொத்த இடங்களில் 50 சதவீதமான இடங்களை அரசின் இடஒதுக்கீடாக பெற வேண்டும் என்றும், அவ்வாறு பெறப்படும் அரசு இடங்களுக்கு அந்தந்த மாநில அரசு சார்பில் நடத்தப்படும் மருத்துவ கல்லூரிகளில் என்ன கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ அந்த கட்டணத்தை கல்வி கட்டணமாக நிர்ணயம் செய்ய வேண்டும் தேசிய மருத்துவ கவுன்சில் ஆணையிட்டுள்ளது. தமிழகத்திலும் புதுச்சேரியிலும் இன்று வரை தேசிய மருத்துவ கவுன்சில் ஆணையத்தின் படி அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் உரிய இடத்தினையும் அதற்கான கட்டணத்தையும் தமிழகத்தில் திமுக அரசும் புதுச்சேரி அரசும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
அந்த அடிப்படையில் புதுச்சேரியில் உள்ள சுமார் 1250 மருத்துவ சீட்டுகளில் 50 சதவீதம் இட ஒதுக்கீடாக 625 சீட்டுகள் பெற வேண்டும். அவ்வாறு பெறப்படுகின்ற சீட்டுகளில் நிர்ணயத்த கட்டணத்தை தான் வசூல் செய்ய வேண்டும் என கூறியுள்ளது. ஆனால் புதுச்சேரி அரசு இவ்விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த ஆண்டு அரசின் இடஒதுக்கீடாக எத்தனை இடங்கள் என அறிவிக்கப்படவில்லை. மருத்துவ கல்வியில் கல்வி கட்டணம் சம்பந்தமாக அமைக்கப்பட்ட கட்டண நிர்ணயக்குழு கடந்த கால திமுக காங்கிரஸ் ஆட்சியில் அமைக்கப்பட்டது. அந்த குழுவின் தலைவராக உள்ளவர் ஒருதலைப்பட்சமாக மருத்துவ கல்லூரி உரிமையாளர்களுக்கு சாதகமாக செயல்படுகிறார். எனவே அக்குழுவின் தலைவரை மாற்றம் செய்து வேறு ஓய்வுபெற்ற நீதிபதியை அரசு நியமனம் செய்து மத்திய அரசின் தேசிய மருத்துவ கவுன்சிலின் ஆணைப்படி கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். இதில் துணைநிலை ஆளுநர் அவர்களும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்.
நம் நாட்டில் விபத்து அதிகம் நடைபெறும் மாநிலமாக புதுச்சேரி உள்ளது. அதை கண்காணிக்க வந்த குழுவை ஏமாற்றும் வகையில் தற்காலிகமாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை அதிகாரிகள் செய்து வருகின்றனர். இதிலும் விருப்பு வெறுப்பை மனதில் கொண்டு ஒரு சில வீடுகளை இடிப்பதும். அதே வரிசையில் உள்ள வீட்டின் படிகளை அப்புறப்படுத்தாமல் செல்வதும் அதிகாரம் துஷ்பிரயோகம் செய்வதாக உள்ளது. நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டியது அவசியமாகும். அதே நேரத்தில் நடைபாதை ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
தீபாவளி பண்டிகை காலத்தில் கடைகளின் படிகளை அகற்றுவதும், வீடுகளை இடிப்பதும் சரியானதாக இல்லை. தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு விருப்புவெறுப்புகள் இன்றி எந்தவிதமான அரசியல் குறுக்கீட்டிற்கும் இடம் அளிக்காமல் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அதுவரை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது புதுச்சேரி நகர செயலாளர் அன்பழகன் உடையார் ,மாநில துணைச் செயலாளர்கள் நாகமணி, காந்தி ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக