வன்னியர் பாதுகாப்பு பேரியக்கத்தின் நிறுவனத் தலைவர் செந்தில் அவர்களை அவதூறாக பேசி வரும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி, முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் சட்டப்பேரவை தலைவர் செல்வம் ஆகியோரை நேரில் சந்தித்து இயக்க நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்
புதுச்சேரி சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்தில், பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம், வன்னியர் பாதுகாப்பு பேரியக்கத்தின் நிறுவன தலைவர் செந்தில் அவர்களை பற்றி அவதூறாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
கல்யாணசுந்தரம் எம்எல்ஏ பேச்சை கண்டித்து பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வந்த நிலையில் புதுச்சேரி வன்னியர் பாதுகாப்பு பேரியக்கத்தின் நிர்வாகிகள், முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் சட்டப்பேரவை தலைவர் செல்வம் ஆகியோரை சந்தித்து, வன்னியர் பாதுகாப்பு பேரியக்கத்தின் நிறுவனத் தலைவர் செந்தில் அவர்களை அவதூறாக பேசிய பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பேரியக்கத்தின் நிர்வாகிகள்,
புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமிக்கு அடுத்து அனைத்து தொகுதிகளிலும் செல்வாக்கு மிக்கவராகவும், அதிக ஆதரவாளர்களை கொண்டவராகவும், இளைஞர்களின் வழிகாட்டியாகவும் செந்தில் இருந்து வருகிறார் என்றும், கடந்த சட்டமன்ற தேர்தலில் காலாப்பட்டு தொகுதியில் முதன்முறையாக சுயேட்சையாக போட்டியிட்டு, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார் என தெரிவித்தனர்.
வெற்றி வாய்ப்பை இழந்தாலும் தொடர்ந்து காலாப்பட்டு தொகுதியில், நலத்திட்ட உதவிகள்,ஆன்மீகப் பணி, கல்வி உதவித்தொகை வழங்குவது உட்பட பல்வேறு சமூக பணிகளை தன்னலம் இன்றி செந்தில் அவர்கள் செய்து வருவதாகவும், அவரது அரசியல் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல், காலாப்பட்டு தொகுதி பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம் தொடர்ந்து பொதுவெளியில் அவதூறாகவும், செந்தில் அவர்களை குற்றவாளி போல் சித்தரித்து பேசி வருவது கண்டனத்துக்குரியது என தெரிவித்தனர்.
10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, தமிழக காவல்துறையால் வரும் நாட்களில் கைது செய்யப்படவுள்ள கல்யாணசுந்தரம் எம்எல்ஏ, வன்னியர் பாதுகாப்பு பேரியக்கத்தின் நிறுவன தலைவர் செந்தில் அவர்களை பற்றி பேச எந்த அருகதையும், தகுதியும் இல்லை என கூறிய அவர்கள், கல்யாணசுந்தரம் எம்எல்ஏ தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை என்றால்,மாநிலம் ஸ்தம்பிக்கும் வகையில் மிகப்பெரிய போராட்டத்தை கையில் எடுப்போம் என எச்சரிக்கை விடுத்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக