புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் செஸ் போட்டி துவக்க விழாவிற்கு வருகை தந்த பிரதமருக்கு மேடையில் வெண்சாமரம் வீசிய திமுக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், மறு தினமே திமுக கூட்டணி கட்சிகளை திருப்திப்படுத்தி தக்க வைத்துக் கொள்ளவும் மக்களை ஏமாற்றவும் மத்திய அரசை வசைப்பாடி அறிக்கை விடுவது ஒரு மாநில முதல்வருக்கு அழகல்ல. தமிழக திமுக முதலமைச்சரின் மத்திய விரோத அறிக்கையை புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சர் திரு நாராயணசாமி அவர்கள் தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு கடந்த ஆட்சியின் போது எனக்கு ஏற்பட்ட நிலைதான் தற்பொழுது தமிழக முதலமைச்சருக்கும் ஏற்படுகிறது என கூறியிருப்பது நகைப்புக்கு உரியதாக உள்ளது.
இந்திய அரசியல் வரலாற்றில் இப்ராஹீம் லோடி ஆட்சியை இருண்ட ஆட்சி என சரித்திர வல்லுனர்கள் குறிப்பிடுவார்கள். அதுபோல் புதுச்சேரி மாநிலத்தின் இருண்ட ஆட்சி என்பது கடந்த திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியாகும். அப்படிப்பட்ட இருண்ட ஆட்சிக்கு தலைமை ஏற்று இருந்த திமுக, காங்கிரஸ் கூட்டணி முதலமைச்சர் திரு. நாராயணசாமி அவர்கள் தற்போதைய தேசிய ஜனநாயக முன்னணியின் அரசை அடிமை ஆட்சி என கூறுவது கண்டனத்திற்குரியதாகும்.
கடந்த ஐந்தாண்டு காலம் தனது கட்சியின் தலைமையை திருப்தி படுத்தவும், தனது மலிவு விளம்பர மோகத்தாலும் தொடர்ந்து மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து தனது ஆட்சி முழுவதும் மக்களுக்கு சொல்லண்ணா துயரத்தை ஏற்படுத்தியவர் திரு. நாராயணசாமி ஆவார். அதை நன்கு புரிந்து கொண்டு தேர்தலில் போட்டியிட்டால் மக்கள் நம்மை புறக்கணிப்பார்கள் என்ற உண்மையை உணர்ந்து ஐந்தாண்டு காலம் முதலமைச்சராக இருந்தவர் தேர்தலில் போட்டியிடாமல் வஞ்சகத்தோடு ஒளிந்து கொண்டார். தேர்தலை கண்டு பயந்து ஒளிந்து கொண்ட முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமிக்கு தற்பொழுது திரு. ரங்கசாமி தலைமையில் நடந்து கொண்டிருக்கும் நல்லாட்சி பற்றி குறை கூறுவதில் எந்த தார்மீக உரிமையும் இல்லை.
இன்னும் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி அந்தமான் சிறையில் நீண்ட நாட்கள் சிறைவாசத்தை அனுபவித்த தியாகி சாவர்க்கரை தியாகிகளாக ஏற்றுக் கொள்ள முடியாது என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி எதற்கு கூறுகிறார் என்று தெரியவில்லை. இவர் எப்பொழுது தியாகிகிகள் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என தெரியவில்லை. நம் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளை குறை கூறி பேச யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. அவர்களது தியாகத்தை பாராட்ட மனமில்லை என்றாலும் அவர்களை குறை சொல்லிப் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்களை பற்றி குறைத்துப் பேச நமக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்வது நல்லது.
மத்திய அரசின் போதிய நிதி பெற முடியாத சூழ்நிலையிலும், மத்திய அரசுடனும், துணைநிலை ஆளுநருடனும் ஒரு இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்தி நல்லாட்சியை நடத்திக் கொண்டிருப்பவர் எங்கள் கூட்டணியின் முதலமைச்சர் ரங்கசாமி ஆவார்.கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல் வடிவத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.
கடந்த திமுக,காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மத்திய அரசு நிதி உதவி அளித்தும் ஒரு ரூபாய் கூட தனது ஆட்சியின் ஐந்தாண்டு காலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டவர் நாராயணசாமி அவர்கள் ஆனால் இன்று ஸ்மார்ட் சிட்டி மூலம் நகரின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றது. கடந்த காலத்தில் கிடப்பில் போட்ட அனைத்து திட்டங்களும் தற்பொழுது செயல்படுத்தப்பட்டு வருகிறது. உண்மையில் திரு. நாராயணசாமி அவர்களுக்கு புதுச்சேரி மாநில மக்கள் மீது அக்கறை இருக்குமேயானால் மக்களுக்கு தேவையானதை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து செயல்படுத்த அரசுக்கு வலியுறுத்துவது என்பது முன்னாள் முதலமைச்சருக்கு உகந்த செயலாகும். அதை விட்டுவிட்டு சகட்டுமேனிக்கு தரம் தாழ்ந்து ஆளும் முதலமைச்சரையும், அரசையும் விமர்சனம் செய்வது என்பது மதிப்புமிக்க செயலாக இருக்காது. எனவே திரு நாராயணசாமி அவர்கள் அரசை விமர்சனம் செய்யும் பொழுது நாவடக்கத்துடன் விமர்சனம் செய்வது நல்லது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக