புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை:
சுத்தமான குடிநீர், சுகாதாரமான இருப்பிடத்தை வழங்க வேண்டியது மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு அரசின் கடமையாகும். ஆனால் காரைக்கால் மாவட்டத்தில் சுத்தமான குடிநீர் வழங்க அரசு தவறிவிட்டது. பல ஆண்டுகளை கடந்த, பயனற்றுப்போன குடிநீர் குழாய்கள் உடைந்து அதில் கழிவுநீர் கலந்துள்ளது. இந்த குடிநீரை குடித்த அப்பாவி காரைக்கால் மாவட்ட மக்கள் வாந்தி, வயிற்றுப்போக்கு என காலராவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காலராவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதை மூடி மறைக்கும் வகையில் இணைநோய்களால் இறந்துவிட்டதாக சுகாதாரத்துறையினர் பூசி மெழுக பார்ப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
காரைக்கால் மாவட்டத்தில் பொது சுகாதார அவசர நிலையும், 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மக்கள் சகஜமான வாழ்க்கையைக்கூட வாழ முடியாத நிலைக்கு அரசு தள்ளி உள்ளது. இதற்கு முழுக்க, முழுக்க புதுச்சேரி அரசின் நிர்வாக சீர்கேடும், நிர்வாக திறமையின்மையும்தான் காரணம். காரைக்கால் மாவட்ட மக்களை தொடர்ந்து அரசு புறக்கணித்து வருகிறது. இதனால்தான் காரைக்கால் மாவட்ட மக்கள் தனி மாநிலம் அந்தஸ்து வேண்டும் என்றும், தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்றும் போராடி வருகின்றனர்.
காலரா பரவி 2 நாட்களுக்கு பிறகு பொதுப்பணித்துறை அமைச்சரை மட்டும் காரைக்கால் அனுப்பி வைத்துள்ளனர். காரைக்கால் மாவட்டமே சுகதார சீர்கேட்டில் சிக்கியுள்ள நிலையில் அங்கு முதலமைச்சர் சென்று ஆய்வு, நிவாரண பணிகளை மேற்கொள்ளவில்லை. தேர்தலுக்கு தேர்தல் வாக்குகளுக்காக மட்டும் காரைக்காலுக்கு சென்று மக்களை சந்திப்பது முதல்அமைச்சருக்கு அழகல்ல. இதை அதிமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
புதுச்சேரி சுகாதாரத்துறை முற்றிலுமாக செயலிழந்துவிட்டது. இறப்புகளையும், பாதிப்புகளையும் மூடி மறைக்க நினைக்கிறது. பள்ளிகளுக்கு விடுமுறை, சுத்தமான குடிநீரை குடியுங்கள் என பொதுவான அறிவிப்புகளை மட்டும் வெளியிடுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் உயிருக்கு போராடும் மிகவும் ஆபத்தான சூழ்நிலை காரைக்காலில் நிலவுகிறது. எனவே மத்திய சுகாதாரத்துறை போர்க்கால அடிப்படையில் காரைக்கால் மாவட்டத்துக்கு மருத்துவக்குழுவை அனுப்பி ஆய்வு செய்து நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும்* என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். *காலராவால் இறந்த 2 பேரின் குடும்பத்துக்கும் புதுவை அரசு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக