புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரி அரசில் காலியாக உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பவில்லை. இதனால் படித்த இளைஞர்கள் வெளிமாநிலங்களுக்கு கொத்தடிமையாக வேலைக்கு செல்லும் துர்பாக்கிய நிலை நிலவுகிறது. புதுச்சேரியில் ஸ்திரமான தொழில்கொள்கை இல்லாததால் புதிதாக எந்த தொழிற்சாலையும் வரவில்லை. சிறு, குறு தொழிற்சாலைகளும் புதுச்சேரியை விட்டு வெளியேறிவிட்டன. தொழிற்சாலைகளுக்கு நிலம், கடனுதவி வழங்கி தொழில்களை ஊக்குவிக்க வேண்டியது பிப்டிக் நிர்வாகத்தின் பணி. ஆனால் சுமார் 10 ஆண்டுக்கும் மேலாக பிப்டிக் நிறுவனம் தனது பணியை சரிவர செய்யாததால் தொழிற்சாலைகள் இன்றி, வேலைவாய்ப்பின்றி இளைஞர்கள் பரிதவித்து வருகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில் *இந்திய ரிசர்வ் வங்கி புதுச்சேரியின் பிப்டிக் பதிவு சான்றிதழை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.* கொரோனா காலகட்டத்திலும், அதற்கு முன்பும் நிதியை சரியாக கையாளாத காரணத்தால் பிப்டிக் நிதி நிறுவன வியாபாரம் மேற்கொள்ள அளிக்கப்பட்ட பதிவு சான்றிதழை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. இதனால் மத்திய அரசிடம் இருந்து இனிமேல் தொழில்துறை தொடர்பாக எந்த நிதியையும் பிப்டிக் நிர்வாகத்தால் பெற முடியாது. மாநில அரசு ஒதுக்கும் நிதியின் மூலமே பிப்டிக் நிறுவனத்தை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
*புதுச்சேரி அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. பிப்டிக் நிர்வாகத்திற்கு நிதி வழங்கும் சூழலில் புதுச்சேரி அரசு இல்லை.* பிப்டிக் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டுள்ள சுமார் ரூ.200 கோடி கடன் தொகையை வசூலிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் சுமார் ரூ.150 கோடி அரசு சார்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்தொகையை பிப்டிக் நிறுவனத்துக்கு அளித்தாலே, பல தொழிற்சாலைகளை உருவாக்கி, வேலைவாய்ப்பை பெருக்க முடியும்.
*பாரத பிரதமர் திரு.நரேந்திரமோடி, தொழில் வளம் உள்ளிட்ட பெஸ்ட் புதுச்சேரியை ஈஉருவாக்குவோம் என வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் புதுச்சேரி அரசின் நிர்வாக திறமையின்மையால் தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் பதிவு சான்றிதழ் ரத்தாகியுள்ளது.* இது புதுச்சேரியில் தொழில் தொடங்குவோரின் எண்ணத்தை தவிடுபொடியாக்கியுள்ளது. பிப்டிக் நிர்வாகத்தை மூடுவிழாவை நோக்கி அழைத்துச்சென்றுள்ளது. *பெஸ்ட் புதுச்சேரி, பாஸ்ட் புதுச்சேரி, பர்ஸ்ட் புதுச்சேரி என மேதகு துணை நிலை ஆளுநர் கூறி வருகிறார். ஆனால் நிர்வாக திறமையற்ற ஒர்ஸ்ட் புதுச்சேரியாக மாறிவருவது* வேதனைக்குரிய உண்மை.
புதுச்சேரி அரசு மாநில இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, பிப்டிக் வராக்கடனை உடனடியாக வசூலிக்கவும், அரசு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழங்கி பிப்டிக் நிறுவனத்தை மேம்படுத்தவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக