சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் புதுச்சேரி தலைவர் ராஜகோபால் பழனி சுவாமி,
கவர்னர், முதல்வர், தலைமை செயலர், காவல் துறை தலைவர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,
புதுச்சேரி, வில்லியனூர் தனியார் திருமண நிலையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்கள், எஸ்ஐஆர் (SIR) குறித்து கேள்வியெழுப்பிய தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் திரு. ராஜீ என்பவரை மிரட்டி, தாக்குதல் தொடுத்த செயலை, சுதந்திர தொழிலாளர் சங்கம் (சு.தொ.ச) வன்மையாகக் கண்டிக்கிறது.
செய்தியாளர் ராஜீ அவர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்க திறனின்றி, திரு. சீமான் அவர்கள், "நீ எந்த தொலைக்காட்சி? உன்னையெல்லாம் எவன் கேள்வி கேட்கச் சொன்னது? உனக்கெல்லாம் என்ன யோக்கியதை இருக்கிறது?" என்று தரக்குறைவான, ஒருமையில் வார்த்தைகளால் திட்டி, கேள்வி கேட்கக்கூடாது என்று மிரட்டி இருப்பது ஜனநாயகத்தின் மீது அவருக்குள்ள நம்பிக்கையை கேள்விக்குறியாக்குகிறது.
அத்துடன், தன்னுடன் வந்திருந்த தனது கூட்டத்தினரை ஏவிவிட்டு, செய்தியாளர் திரு. ராஜீ அவர்களை நெட்டித் தள்ளி தாக்கச் செய்துள்ளார்.
இந்த அத்துமீறல், ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று மதிக்கப்படும் பத்திரிகைத் துறையின் சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட மிகக் கேவலமான அச்சுறுத்தலாகும்.
எல்லா அரசியல் கட்சியின் தலைவர்களுக்கு முன்னுதாரணமாக பெருந்தன்மையுடனனும், அரசியல் முதிர்ச்சியுடனும், பொறுமையுடனும் செயல்பட்டு வந்த திரு சீமான் அவர்களின் இந்த மாற்றம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
பொது விவாதங்களில் பொதுமக்களுடனும், செய்தியாளர்கள் வைக்கும் கேள்விகளுக்கு நிதானத்துடனும், மரியாதையுடனும் பதிலளித்தவரிடம் ஏன் இந்த மாற்றம்?
கடந்த காலங்களில் இருந்த மதிப்புமிக்கத் தலைவர்கள் பத்திரிகையாளர்களின் கேள்விகளை மதித்து, கோபமின்றி பதிலளித்து, அவர்களுடன் நல்லுறவைப் பேணி வந்த பாரம்பரியத்தை நாம் அறிவோம்.
ஆனால், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் போன்ற அரசியல்வாதிகள் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு முறையாகப் பதிலளிக்காமல், அவர்கள் எந்தப் பத்திரிகை, எந்த ஊடகம் என்று விசாரித்து மிரட்டுவதும், பொதுவெளியில் அவர்களை ஒருமையில் பேசுவதும், தனது கூட்டாளிகளுடன் அவர்களை அவமரியாதை செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது.
செய்தியாளர்களுக்குத் துணையாக யாரும் இல்லை என்ற எண்ணத்தில், தனது ஆட்களை ஏவிவிட்டுத் தாக்குவது அராஜகத்தின் உச்சகட்டம். இது ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கும் செயலாகும்.
செய்தியாளர் திரு. ராஜீ அவர்களை மிரட்டிய திரு. சீமான் மற்றும் பத்திரிகையாளரைத் தாக்கிய அவரது கூட்டத்தினர் மீது, புதுச்சேரி பத்திரிகையாளர் சங்கங்கள் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்தது பாராட்டத்தக்கது.
மேலும் இனி மேல் அரசியல் கட்சிகள் நடத்தும் அனைத்து பத்திரிகையாளர் சந்திப்பிற்கு காவல்துறையின் அனுமதி பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று சுதந்திர தொழிலாளர் சங்கம் வலியுறுத்துகிறது. மேலும் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு குறித்து அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது
கருத்துகள்
கருத்துரையிடுக