தலித் மாணவர் வன்கொடுமை விவகாரத்தில் IGMC & RI இயக்குனர் உதயசங்கர் மீது வழக்கு பதிவு செய்ய தலைமைச் செயலாளரிடம் விசிக வலியுறுத்தல்!
இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (B.Sc Nursing) செவிலியர் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் சஞ்சய் மற்றும் பிற தலித் மாணவர்கள் பாகுபாடு மற்றும் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். ஆதிதிராவிடர் நலவிடுதியில் தங்கி படிக்கும் தலித் மாணவர்களின் உடை மற்றும் உணவு குறித்து இழிவுபடுத்தி பேசிய IGMC &RI இயக்குனர் உதயசங்கர் மற்றும் பேராசிரியர்கள் வசந்தி, உமா, நித்யா ஆகியோர் மீது பாதிக்கப்பட்ட தலித் மாணவன் சஞ்சய் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் மற்றும் PCR செல்லில் புகார் அளித்துள்ளார்.இருப்பினும்
வன்கொடுமையில் ஈடுபட்ட இயக்குனர் மற்றும் பேராசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் PCR செல் காவல்துறையினர் காலம் கடத்தி வருகின்றனர்.தலித் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை திருத்த சட்டம் 2015 படி ( POA ) புகார் பெறப்பட்ட 24 மணி நேரத்திற்குள் வழக்கு பதிவு செய்ய வேண்டும். இந்த சட்டத்திற்கு விரோதமாக புகார் பெறப்பட்டு ஒரு மாத காலம் ஆகியும் விசாரணை என்ற பெயரால் PCR செல் கண்காணிப்பாளர் சரவணன் வழக்கு பதிவு செய்யாமல் புகாரை நீர்த்துப் போக செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.எனவே தலித் மாணவர்களுக்கு எதிரான வன்கொடுமையில் ஈடுபட்ட இயக்குனர் உதயசங்கர் உள்ளிட்ட பேராசிரியர்கள் மூவர் மீதும் தலித் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளர் அவர்களின் தலைமையில் புதுச்சேரி அரசின் தலைமைச் செயலாளர் சரத் சௌஹான் IAS அவர்களிடம் பாதிக்கப்பட்ட தலித் மாணவர் சஞ்சய் புகார் அளித்தார். வன்கொடுமை விவரங்களை கேட்டு அறிந்த தலைமைச் செயலாளர் இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளின் பார்வைக்கு புகாரை அனுப்புவதாகவும்,உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
இந்த சந்திப்பின் பொழுது முற்போக்கு மாணவர் கழகத்தின் மாநில செயலாளர் இரா. தமிழ்வாணன்,துணை செயலாளர் சிவச்சந்திரன்,விசிக நிர்வாகிகள் ஈழவளவன், இளங்கோ, இளையராஜா,மனித உரிமை செயல்பாட்டாளர் காளிதாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக