முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கல்வித்துறைக்கு நிரந்தர இயக்குநரை நியமிக்க சிபிஎம் வலியுறுத்தல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் புதுச்சேரி மாநில செயலாளர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறையின் நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் கொள்கை மீறல்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்.) இன்று (11.11.2025) . இது தொடர்பாக, கட்சியின் சார்பில், மாண்புமிகு துணை நிலை ஆளுநர் மற்றும் தலைமைச் செயலாளர் அவர்களுக்கு விரிவான கடிதத்தை அனுப்பி உள்ளோம் அது இணைப்பில் உள்ளது.

கல்வித்துறை மிக முக்கியத்துவம் வாய்ந்த துறையாக இருந்தும், தற்போது இத்துறை 'கவனிப்பாரற்ற துறையாக' இருப்பதாக எங்கள் கட்சி கருதுகிறது.


 * ஆசிரியர்களை தேர்தல் பணிக்கு அனுப்பியதற்குக் கண்டனம்: ஏற்கனவே பள்ளிகளில் கடுமையான ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவும்போது, பெரும்பாலான ஆசிரியர்களை எஸ்.ஐ.ஆர் (SIR) தேர்தல் பணிக்காகப் பயன்படுத்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதைத் தடுக்க, அவர்களை உடனடியாகப் பள்ளிப் பணிக்குத் திரும்ப அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

 * நிரந்தர இயக்குநரை நியமிக்க வேண்டும்: பள்ளிக்கல்வி, உயர்கல்வி மற்றும் சென்டாக் உட்பட பல பொறுப்புகளை ஒரே இயக்குநர் வகிப்பதால், அவரால் தனது கடமைகளை முழுமையாகச் செய்ய முடியவில்லை. எனவே, பள்ளிக்கல்வித்துறைக்கு தனித்த, தமிழ் மொழி அறிந்த நிரந்தர இயக்குநரை அரசு அவசரமாக நியமிக்க வேண்டும். மற்ற துறைகளுக்கும் தனித்தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.

 * இடமாற்றல் கொள்கை மீறல் கூடாது: 17.07.2025 தேதியிட்ட அரசாணை எண் 15-ன் படி வகுக்கப்பட்ட இடமாற்றல் கொள்கை உறுதியாகப் பின்பற்றப்பட வேண்டும். கொள்கையை மீறி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரே பணியிடத்தில் தொடரும் இணை இயக்குநரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும்.

 * தாய்மொழி வழிக் கல்வி நீக்கத்திற்குக் கண்டனம்: மாநிலப் பாடத்திட்டத்தின் கீழான தாய்மொழி வழிக் கல்வியை நீக்கி, மத்திய பாடத்திட்டத்தைத் திணிக்கும் முடிவை நிறுத்தி வைத்து, கல்வியாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் கருத்தை அரசு கேட்டறிந்து பொருத்தமான அணுகுமுறையை உருவாக்க வேண்டும்.

 * கல்வி சாரா பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும்: கல்விச் சாராப் பணிகளுக்கு ஆசிரியர்களைப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

மிக அதிகமாக உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பெரும்பாலான பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் சாராத பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பள்ளிகளுக்கு தேவையான உள்கட்ட அமைப்பு வசதி ஆகியவற்றை ஏற்படுத்தி தர வேண்டும். 

மேற்கண்ட நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் கொள்கை மீறல்கள் தீர்க்க புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது 


கருத்துகள்