புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வெற்றி கூட்டணி வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து மண்ணாடிப்பட்டு சட்டமன்ற தொகுதியில் புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் பேசியதாவது,
நடைபெற இருக்கும் இந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் நமச்சிவாயம் அவர்கள் விருப்பமின்றி இந்த தேர்தலில் போட்டியிடுகின்றார். இந்த மண்ணாடிப்பட்டு தொகுதி என்பது மாநில உள்துறை அமைச்சரின் தொகுதியாகும். ஏற்கனவே அவர் வில்லியனூரில் இருந்து இந்த தொகுதிக்கு மாறி நின்று தேர்தலில் வெற்றி பெற்றார். அவரது வெற்றிக்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் பணி செய்தனர். அவரும் வெற்றி பெற்று உள்துறை அமைச்சர் ஆனார். அவர் உள்துறை அமைச்சர் ஆனவுடன் நிறைய இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக அவரிடம் சென்று வருகின்றனர். உள்துறை அமைச்சராக இருக்கும் நமச்சிவாயம் வெற்றி பெற்றால் அவர் டெல்லிக்கு பாராளுமன்ற உறுப்பினராக சென்று விடுவார். சட்டமன்றத் தேர்தல் வருவதற்கு இன்னும் இரண்டு ஆண்டு காலம் இருக்கும் சூழ்நிலையில் நமச்சிவாயத்திற்காக ஏற்கனவே உழைத்தவர்கள் நிற்கதியின்றி நிற்கும் சூழ்நிலை ஏற்படும். இவை அனைத்தையும் உணர்ந்து உங்கள் தொகுதியின் உடைய வேட்பாளர் நமச்சிவாயம் அவர்களுக்கு நீங்கள் வாக்களித்து உங்களை நீங்களே அழித்துக்கொள்ளாதீர்கள்.
இந்த சட்டமன்றத் தொகுதி அமைச்சர் என்ற அந்தஸ்தை இழக்கும் தொகுதியாக மாறிவிடும். இந்த தொகுதியில் மீண்டும் ஒரு இடைத்தேர்தல் அவசியமா என்பதை இந்த தொகுதி மக்கள் உணர்ந்து கழக வேட்பாளர் தம்பி தமிழ்வேந்தன் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறோம்.
புதுச்சேரியை ஆளும் பாஜக அரசாங்கம் கிராமப்புற மக்களை ஏமாற்றும் அரசாக இருக்கின்றது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வராத அரசாக உள்ளது. 100 நாள் வேலைத்திட்டம் ஆண்டுக்கு 200 நாட்கள் பணி வழங்கப்படும் என அறிவித்தனர். ஆனால் இந்த 100 நாள் கூட ஒழுங்காக பணி வழங்குவதில்லை. விவசாயிகள் நிரம்பிய இந்த தொகுதியில் விவசாயம் செய்யவே விவசாயிகள் அஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். புதுச்சேரியின் கூட்டுறவு சர்க்கரை ஆலை மூடப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது.
புதுச்சேரி மாநிலம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தும் மாநிலமாக மாற்றப்பட்டு வருகிறது. சட்டம் ஒழுங்கு அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச சைக்கிள், லேப்டாப் போன்ற பொருட்கள் தரமற்றதாக வழங்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் பாஜக வெற்றி பெற்றால் மாண்புமிகு முதலமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டு ஆட்சி மாற்றத்தை பாஜக உடனடியாக கொண்டுவரும். இந்த அரசு பதவி ஏற்ற 3 ஆண்டு காலம் ஆகியும் ரேஷன் கடையை கூட இதற்கு முன்பு திறக்க முன்வரவில்லை. இலவச அரிசி வழங்கப்படவில்லை. இலவச அரிசிக்கு பதிலாக 10 கிலோ அரிசி வாங்கும் அளவிற்கு 600 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. அட்டவணை இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு எந்த ஒரு திட்டத்தையும் இந்த அரசு செயல்படுத்தவில்லை. படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தரவில்லை. மாறாக புதுச்சேரி மாநிலத்திலிருந்து பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு வேறு மாநிலத்திற்கு சென்று கொண்டிருக்கின்றது.
அட்டவணை இனத்தை சேர்ந்த மக்களுக்கு இதுவரை இவர் பட்டா கூட வாங்கிதரவில்லை. நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றவுடன் வில்லியனூரில் இருந்து எனது வீட்டை மாற்றிக்கொண்டு மண்ணாடிப்பட்டுக்கு வந்துவிடுவேன் என்றார். ஆனால் அதை செய்யவில்லை.
ஐந்தாண்டு காலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வைத்திலிங்கம் அவர்கள் இந்த மாநிலத்திற்கு எந்த ஒரு திட்டத்தை கொண்டு வராதவர். பாராளுமன்ற உறுப்பினரின் நிதியைக் கூட முழுமையாக செலவு செய்யாமல் 25 சதவீதத்திற்கு மேற்பட்ட நிதியை அரசிடமே ஒப்படைத்துள்ளார்.
நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நமச்சிவாயம் வெற்றி பெற்றது அதிமுகவின் ஆதரவில் தான். தற்போது நடைபெறும் பாஜக ஆட்சி என்பது அதிமுக போட்ட பிச்சை. எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் உங்கள் வேட்பாளராக மக்களுக்கு உழைக்கக்கூடிய சகோதரி மகாதேவி அவர்கள் மீண்டும் நிறுத்தப்படுவார். அவர் சட்டமன்ற உறுப்பினராக உங்களால் தேர்வு செய்யப்படுவது உறுதியாகும். எனவே நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் உங்கள் வீட்டுப்பிள்ளை படித்த இளைஞர் தம்பி தமிழ்வேந்தன் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன். தமிழ்வேந்தான் வெற்றி பெற்றால் தான் மாநிலத்தின் உரிமைகள் மீண்டும் கொண்டுவரப்படும். மாநில அந்தஸ்து பெறப்படும் மத்திய நிதி குழுவில் புதுச்சேரி சேர்க்கப்படும். விவசாயிகள் நலன் காக்கப்படும் என்றார்.
கருத்துகள்
கருத்துரையிடுக