முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முதல்வர் ரங்கசாமி மீது சிபிஐ விசாரணை கோரும் அதிமுக.!

புதுச்சேரி மாநில கழக துணை செயலாளர், Ex.Mla., திரு.வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,


புதுச்சேரியில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் பல்வேறு ஊழல், முறைகேடுகள் தொடர்கிறது. தனியார் மருத்துவக்கல்லூரி நிர்வாகங்களுக்கு ஆதரவாக புதுச்சேரி முதலமைச்சரும், அவரின் உத்தரவின்பேரில் சென்டாக் நிர்வாகத்தில் பல ஆண்டாக தொடர்ந்து பணியாற்றி வரும் அதிகாரிகளும் செயல்படுகின்றனர். இதற்கு சாட்சியாக சென்டாக் அலுவலகம் எதிரே தனியார் கல்லூரி நிர்வாகியுடன், சென்டாக்கின் மூத்த அதிகாரி காரில் அமர்ந்து பேரம் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதைப்போல பல்வேறு குற்றச்சாட்டுகளை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 2 முறை புதுடில்லி சிபிஐ இயக்குனருக்கு ஆதாரங்களுடன் புகாரும் அனுப்பியுள்ளோம்.

முதலமைச்சர் அண்ணனை காப்பாற்றும் வகையில் பாசமலரான தங்கை மேதகு துணை நிலை ஆளுநர் தமிழிசை, அதிமுகவின் புகாரை தொடர்ந்து அலட்சியம் செய்து வருகிறார். புதுச்சேரியில் மாணவர்கள் நலனுக்காகவே அரசு செயல்படுகிறது என்றும் எந்த ஊழலும், முறைகேடுகள் நடைபெறவில்லை என கூறி பாசமலர்கள் கபட நாடகம் நடத்தி வருகின்றனர்.

அதிமுக கூறியதுபோல, புதுச்சேரி அரசு மருத்துவக்கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. இதன்பின் கெஞ்சி, கூத்தாடி அரசு மருத்துவக்கல்லூரிக்கு அங்கீகாரம் பெறப்பட்டது. அங்கீகாரம் பெற தவறிய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மேதகு துணை நிலை ஆளுநர் வாய் சவடால் விட்டார். ஆனால் இன்று வரை அரசு மருத்துவக்கல்லூரியை சேர்ந்த கடைநிலை ஊழியர் மீது கூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றி, இந்திய மருத்துவ ஆணையம் செப்டம்பர் 30ம் தேதிக்குள் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவையும் முதலமைச்சரும், சென்டாக் அதிகாரிகளும் அலட்சியம் செய்தனர். குறிப்பிட்ட கெடுவுக்கு பிறகும் 350க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கி உள்ளனர். இந்த அலட்சியப்போக்கால் மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக நிற்கிறது. இதற்கு மேதகு துணை நிலை ஆளுநர் தமிழிசை, தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வழக்கம்போல பழைய பல்லவியை பாடியுள்ளார். இதை புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

புதுச்சேரி மாநில மாணவர்கள் நலனிலும், எதிர்காலத்திலும் உண்மையிலேயே மேதகு துணைநிலை ஆளுநருக்கு அக்கறை உள்ளதா? அப்படி அக்கறை இருந்தால் உடனடியாக புதுடில்லிக்கு சென்று பிரதமர், மத்திய அமைச்சர்களை சந்தித்து மருத்துவ மாணவர்களின் சூழ்நிலையை விளக்கி இந்த ஆண்டு ஒரு முறை தளர்வு பெற வேண்டும். அவர்கள் அனுமதியளிக்காவிட்டால், ஒரு நொடியும் காலதாமதம் செய்யாமல், உச்சநீதிமன்றத்தை புதுச்சேரி அரசு சார்பில் அணுகி, காலம் கடந்த மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெற வேண்டும். இனி வரும் காலத்திலாவது சென்டாக் மாணவர் சேர்க்கை முறையாக நடைபெற, அங்குள்ள அதிகாரிகளை ஒட்டுமொத்தமாக பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட வேண்டும்.

ஊழலற்ற வெளிப்படையான ஆட்சி நடத்துகிறோம் என சொல்வது உண்மையானால், *மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஊழல், முறைகேடுகளை களைய சென்டாக் அதிகாரிகள் மீதும், அத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் மீதும் சிபிஐ விசாரணைக்கு, மேதகு துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்ய வேண்டும்* என புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.


கருத்துகள்