முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாணவர்களிடம் முதல்வர் பொது மன்னிப்பு கேட்கவேண்டும்- அதிமுக வலியுறுத்தல்.!

புதுச்சேரி மாநில கழக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் அவர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,

கல்விக்கண் திறந்த காமராஜர் வழியில் ஆட்சி நடத்துகிறோம் என கூறிக்கொள்ளும் முதலமைச்சர் தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் அரசு தொடர்ந்து புதுச்சேரி மாநில மாணவர்களை சொல்லவொண்ணா துயரத்தில் ஆழ்த்துவதை வாடிக்கையாக வைத்துள்ளது. புதுச்சேரியை கல்வி கேந்திரமாக மாற்றி வருகிறோம் என வீண் தம்பட்டம் அடிப்பதில் மட்டும்தான் முதலமைச்சர் கவனம் செலுத்துகிறார். எதிர்கால இந்தியாவின் தூண்களான மாணவ செல்வங்கள் கல்வி தொடர்பான எல்லா விஷயங்களிலும் அலைக்கழிக்கப்பட்டு, பெரும் போராட்டத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள மருத்துவ கல்லுõரிகளில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு காலக்கொடு நிர்ணயிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை ஏற்று இந்திய மருந்துவ கலந்தாய்வு மையம் செப்டம்பர் 30ம் தேதிக்குள் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

நீதிமன்றங்களின் உத்தரவுக்கு புதுச்சேரி முதலமைச்சர் எப்போதும் செவிசாய்த்தது கிடையாது. அதேபோல இந்த உத்தரவையும் அலட்சியப்படுத்தி, தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு சாதகமாகவும், சுயலாப நோக்கோடும் முதலமைச்சர் உத்தரவின்பேரில் திட்டமிட்டு மருத்துவ கலந்தாய்வை சென்டாக் அதிகாரிகள் இழுத்தடித்தனர்.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு பின் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவம் சார்ந்த மாணவர்களுக்கு சேர்க்கை ஆணையை சென்டாக் நிர்வாகம் வழங்கியுள்ளது. இன்னும் முழுமையாக கலந்தாய்வை முடிக்கவும் இல்லை. பல் மருத்துவ படிப்புகளுக்கும் கலந்தாய்வு நடத்த அக்டோபர் 18ம் தேதி காலக்கெடு முடிந்துள்ளது. அவர்களுக்கும் முழுமையாக கலந்தாய்வை முடிக்கவில்லை.

புதுச்சேரி அரசு, சென்டாக் அதிகாரிகள் அலட்சியத்தால் 2016ல் குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு பின் சேர்க்கப்பட்ட, 776 மருத்துவ மாணவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் நீண்ட சட்ட போராட்டத்துக்கு பின் அங்கீகாரம் பெற்றனர். அதேபோன்ற நிலையை இப்போதும் முதலமைச்சரும், சென்டாக் அதிகாரிகளும் ஏற்படுத்தியுள்ளனர். மாணவர்கள் மீதான அலட்சிய போக்கை அதிமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

இப்போது தலைமை செயலர், சுகாதாரத்துறை செயலர், முதலமைச்சர் ஆகியோர், மருத்துவ கலந்தாய்வுக்கு சிறப்பு அனுமதி கோரி கடிதம் எழுதியுள்ளது புதுச்சேரி அரசின் கையாலாகததனத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது*. இந்திய மருத்துவ மையம், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்பதால், செப்டம்பர் 30ம் தேதிக்கு பிறகு மாணவர் சேர்க்கைக்கு அனுமதியில்லை என திட்டவட்டமாக இப்போது அறிவித்துள்ளது. புதுச்சேரி முதலமைச்சர், சென்டாக் அதிகாரிகளின் அலட்சியத்தால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவம் சர்ந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

என்.ஆர்.காங்கிரஸ் அரசின் பொறுப்பற்ற செயல்பாட்டுக்கு பொறுப்பேற்று, முதலமைச்சர் புதுச்சேரி மாநில மாணவர்களிடம் பொது மன்னிப்பு கேட்கவேண்டும். மாணவர்களுக்கு செய்த துரோகத்திற்கு பிராய்ச்சித்தமாக கோவில்களுக்கு செல்வதை விட்டுவிட்டு, உச்சநீதிமன்றத்தை நாட வேண்டும். இனி மருத்துவ மையம் நிர்ணயிக்கும் காலக்கெடுவுக்குள் கலந்தாய்வை நடத்துவோம் என வாக்குறுதி அளித்து, கூடுதல் கால அவகாசம் பெற்று மருத்துவ கலந்தாய்வை நடத்த வேண்டும் என புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். என குறிப்பிடப்பட்டுள்ளது.


கருத்துகள்