முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விசிக தலைவர் திருமாவளவனுக்கு புதுச்சேரி பாஜக கண்டனம்.!

புதுச்சேரி பாஜக மாநில தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


புதுச்சேரி மாநிலத்தில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதாக திருமாவளவன் கூறியுள்ளார். இந்த பொய்யான கருத்தை பாஜக வன்மையாக கண்டிக்கிறது. மேலும் கடந்த காலங்களில் நாடு முழுவதும் தனியார் மயமாக்கலை ஊக்கப்படுத்தியது திரு.மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு என்பதை மக்கள் இன்றும் மறந்துவிடவில்லை. ஜிப்மர் மருத்துமனையில் தற்போது தமிழகத்திலிருந்து சிகிச்சைக்கு வரும் ஏழைகளுக்கு உடனே அனுமதி அளிக்கவில்லை என்று பொய்யான கருத்தை கூறி வரும் திருமாவளவனுக்கு தற்போது மட்டுமல்ல எப்போதும் வெளிமாநிலத்தை சேர்ந்த மக்களே அதிகம் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற உண்மை தெரிந்தும் தெரியாதது போல் நாடகமாடி வருகிறார். ஜிப்மர் மருத்துவமனை புதுச்சேரி, தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாநில மக்களுக்கு முழு சேவையாற்றி வருகிறது என்பதை பொதுமக்கள் நன்கு அறிவர்.

அதானியின் சொத்துக்கள் அனைத்தும் மோடி அவர்களின் சொத்துக்கள் என்றும் இதன்படி உலக பணக்காரர்களில் 3வது இடத்தில் இருக்கின்றார் என்பது திருமாவளவனின் பொய்கூற்று. 2ஜி ஸ்பெக்ட்ரம், நிலக்கரி ஒதுக்கீட்டில் ஊழல், காமன்வெல்த், போபர்ஸ் பீரங்கி ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், நேஹனல் ஹெரால்டு ஊழல் போன்ற பல்வேறு ஊழல்களில் முதன்மையாக விளங்கிய காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து அதன் மூலம் திருமாவளவன் தனிப்பட முறையில் சேர்த்த கோடிக்கணக்கான சொத்தை அவர் மறந்து விட்டாரா? தொழிலில் முதலீடு செய்து சம்பாதித்து வரும் அதானியின் சொத்துக்களை பற்றி விமர்சிப்பதற்கு திருமாவளவனுக்கு எந்த தகுதியும் இல்லை.

மாண்புமிகு பிரதமர் அவர்கள் செயல்முறைபடுத்தும் புதிய திட்டங்கள் மற்றும் கடந்த காலத்தில் மக்களுக்கு பயன்படாமல் இருந்த திட்டங்களை கொண்டு சேர்க்கும் முயற்சியில் வெற்றி பெற்றும் வருகிறார். மேலும் உலக பொருளாதாரத்தில் தற்போது இந்தியா 5வது
 இடத்தில் உள்ளது. இது போன்ற பல்வேறு சாதனைகளை படைத்து உலகம் போற்றும் உன்னத தலைவராக திகழ்ந்து வரும் பிரதமரை குறை கூறும் திருமாவளவன் செய்த சாதனை பட்டியல் என்னவோ?

டாக்டர் அம்பேத்கர் அவர்களை தோற்கடித்த காங்கிரஸ் கட்சியுடன் தன் சுயநலத்திற்காக கூட்டணியில் அங்கம் வகித்து மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் கட்சி விடுதலை சிறுத்தை கட்சி. ஆனால் அம்பேத்கருடன் கூட்டணி அமைத்து அவரது வெற்றிக்கு பாடுபட்ட ஜனசங்கம் வழிவந்த பாஜக தலைமையிலான அரசு மோடி அரசு. எனவே அம்பேத்கரின் பெயரை மையப்படுத்தி ஓட்டு வங்கிக்காக தவறான கருத்துக்களை பரப்பிவரும் திருமாவளவன் இனி இதுபோன்ற செயல்களை கைவிட வேண்டும்.

வி.சி மாடல் புதுச்சேரியில் செல்லுபடியாகாது என்றும், இதே போன்று தவறான கருத்துக்களை தொடர்ந்து பரப்பி விளம்பரம் செய்து வந்தால் திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்பதை பாஜக சார்பாக இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இவரது கருத்துக்களை கண்டித்து அனைத்து காவல் நிலையங்களிலும் புதுச்சேரி பட்டியல் அணி சார்பாக நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்