புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
25 ஆண்டுகளுக்கு மேலாக மத்தியிலும், மாநிலத்திலும் மத்திய இணையமைச்சராகவும், மாநில முதலமைச்சராகவும், ராஜ்யசபா உறுப்பினராகவும், கொலோச்சிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அவர்களுக்கு தற்பொழுது எந்த பதவியிலும் இல்லாததால் விரக்தியின் விளிம்பில் செய்வதெரியாது முறை தவறி பேசுகிறார்.
எந்த இடத்திலும் தனது கையில் ஒலிபெருக்கி கிடைத்தால் மக்களுடைய நலனுக்காக சிறப்பாக செயல்பட்டு வரும் எங்கள் கூட்டணி அரசின் முதலமைச்சர் மாண்புமிகு ரங்கசாமி அவர்களைப் பற்றி அவதூறாக முகம் சுளிக்கும் விதத்தில் பேசுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்.
ஐந்தாண்டு காலம் முதலமைச்சராக இருந்து விட்டு தோல்வி பயத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிய திரு. நாராயணசாமி அவர்கள் ரங்கசாமி தலைமையில் புதிய ஆட்சி அமைந்தயுடன் எங்கள் கூட்டணி கட்சியினரை வாய்க்கு வந்தபடி வசை பாடினார். தனது கட்சியைச் சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகளையும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களையும் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்தார். தற்பொழுது காங்கிரஸ்சின் பிரதான கூட்டணி கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தை எங்களை அழிக்க திராவிட முன்னேற்ற கழகம் செயல்படுகிறது என்கின்ற விதத்தில் தொடர்ந்து பல குற்றச்சாட்டுகளின் கூறுவதும், பல விஷயங்களில் அவர்கள் பொது இடத்தில் கை கோர்ப்பதும் திரு நாராயணசாமி அவருடைய நம்பகத்தன்மைக்கு எடுத்துக்காட்டாகும்.
தற்பொழுது சட்டமன்றத்தில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் உடனுக்குடன் செயல்படுத்தி தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு சிறப்பான திட்டங்களை செயல்படுத்துவதில் முன்னோடி மாநிலமாக இருக்கும் புதுச்சேரி மாநில முதலமைச்சரை பற்றி தொடர்ந்து வாய்க்கு வந்தபடி அருவருக்கத்தக்க அளவில் விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றார்.
அரசியல் ரீதியில் ஒரு சில பிரச்சனைகளின் அடிப்படையில் மாற்றுக் கட்சியினரை நாகரிகத்துடன் விமர்சனம் செய்வது தவறில்லை. ஆனால் தொடர்ந்து வாய்க்கு வந்தபடி பொய்யான குற்றச்சாட்டுகளையும், நடக்காத செய்திகளையும் இட்டுக்கட்டி பேசுவதையே நாராயணசாமி வாடிக்கையாக கொண்டுள்ளார். 10 கோடி ரூபாய் செலவில் ஒரு திட்டத்தை அரசு செயல்படுத்தினால் 100 கோடி லஞ்சமாக பெற்றுவிட்டனர். இதில் முதலமைச்சருக்கு பைப்பையாக செல்கிறது என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி சிறந்த தமாஷ் நடிகர் போன்று இவரது செயல்பாடு இருந்து வருகிறது.
தற்பொழுது மாநில அந்தஸ்து விஷயத்தில் மாண்புமிகு முதலமைச்சரை குறை கூறி உள்ளார்.புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து பெரும் விஷயத்தில் எங்களது கூட்டணி கட்சிகளையோ, புதுச்சேரி மாநில முதலமைச்சரை பற்றியோ பேசுவதற்கு நாராயணசாமிக்கு எந்த தகுதியும் இல்லை. 20 ஆண்டுகாலம் மத்தியிலும், மாநிலத்திலும் தொடர் ஆட்சியில் இருந்த காங்கிரசும், திராவிட முன்னேற்ற கழகமும் அப்போதே நினைத்திருந்தால் புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்தை பெற்றுத் தந்திருக்க முடியும். இவை எல்லாம் மூடி மறைத்து விட்டு எங்கள் மக்கள் முதலமைச்சரை நாராயணசாமி வசை பாடுகிறார்.
அதிலும் நேற்றைய தினம் உச்சகட்டமாக திரு ரங்கசாமி உடம்பில் உயிருள்ளவரை மாநில அந்தஸ்து பெற முடியாது என இந்நாள் முதலமைச்சரை பார்த்து சாபம் இடுவது போன்று பேசுகிறார்.
இது போன்ற வார்த்தைகள் ஒரு நல்ல அரசியல்வாதிக்கு அழகா ? மக்களுக்காக தொடர்ந்து வாழ்ந்து வரும் ஒரு முதலமைச்சரை பார்த்து ஒரு முன்னாள் முதலமைச்சராக இருந்த இவர் நீங்கள் உயிரோடு உள்ளவரை புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து கிடைக்காது என்ற ரீதியில் பேசலாமா ?
இப்படி எல்லாம் மாண்புமிகு முதலமைச்சரை பற்றி கேவலமாக விமர்சனம் செய்வதுதான் அரசியல் பண்பாடா ?.
தனது கட்சிக்காரரை திட்டுவதும், தனது கூட்டணி கட்சி நிர்வாகிகளை தரம் தாழ்ந்து பேசுவதும் மற்ற அரசியல்வாதிகளை பார்த்து சாபம் இட்டு பேசுவதும் முதலமைச்சரை பார்த்து உயிரோடு உள்ளவரை நீங்கள் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வாங்க முடியாது என பேசி வருவது என்பது மன நோயாளியின் பிதற்றலாக உள்ளது.
எனவே முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அமைதியான ஒரு இடத்தில் ஆரோக்கியமான சூழ்நிலையில் தன்னந்தனியாக ஓய்வெடுப்பது அவரது நலத்துக்கு ஏற்புடையது ஆகும் .நான் அவர் மேல் உள்ள அக்கறையில் இதை கூறுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக