புதுச்சேரி பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்டதற்கு வில்லியனூர் காவல் நிலைய ஆய்வாளரே முதற்காரணம் என எதிர்க்கட்சி தலைவர் சிவா பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பூஜ்ய நேரத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சிவா,
புதுச்சேரியில் ஆளுகின்ற என்.ஆர் காங்கிரஸ் -பாஜக கூட்டணி ஆட்சியில், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்றும், காவல்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகள் குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்துக்கொண்டு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் சிவா,
புதுச்சேரி மாநிலம் முழுவதும் கஞ்சா விற்பனை தங்கு தடையின்றி நடைபெறுவதாகவும், சில ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களே இந்த தொழிலை செய்வதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார். ஆளுங்கட்சி பிரமுகர் வெடிகுண்டு வீசி, கத்தியால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், பாஜக பிரமுகர் கொலை நடக்கப்போவது முன்கூட்டியே வில்லியனூர் காவல் நிலைய ஆய்வாளருக்கு தெரிந்தும்,அவர் மெத்தனமாக இருந்ததால் இந்த கொலை அரங்கேறியுள்ளதாக தெரிவித்த சிவா, இந்த கொலை நடந்ததற்கு முழு முதற்காரணம் வில்லியனூர் ஆய்வாளரே என்று குற்றம் சாட்டினார்.
எனவே இந்த கொலை வழக்கை வில்லியனூர் ஆய்வாளர் விசாரிக்க கூடாது என்றும், அவருக்கு பதிலாக வேறு ஒருவரை புதிதாக நியமனம் செய்து இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருவதாகவும், இங்கு உள்ள ஒரு சில காவல்துறை ஆய்வாளர்கள் கஞ்சா விற்பதிலும், ரியல் எஸ்டேட் புரோக்கர் தொழில் செய்து வருவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
கருத்துகள்
கருத்துரையிடுக