முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆணவ முதலமைச்சர்.! அதிமுக கண்டனம்.!

புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., திரு.வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,

புதுச்சேரி மாநிலத்தின் கலாச்சாரம் ரெஸ்டோ பார்கள் எனப்படும் கவர்ச்சி நடன பார்களால் சீரழிந்து வருகிறது. அரைகுறை ஆடைகள் அணிந்து கொண்டு வெளிமாநில இளைஞர்களும், இளம்பெண்களும் மதுக்கடைகளில் வரிசையில் நிற்பது வாடிக்கையாகி விட்டது. மது அருந்திவிட்டு நகர வீதிகளில் ஆட்டம் போடுவது, புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த இளைய சமுதாயத்தை தவறான பாதைக்கு வழிநடத்துகிறது. *மது அருந்துவதுதான் நவீன கலாச்சாரம், நாகரீகம் என்ற ரீதியில் செல்வது புதுச்சேரி மாநில எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை சீரழிக்கும்.*

இதைப்பற்றி துளியும் அக்கறையில்லாத முதலமைச்சர், ரெஸ்டோ பார்கள் இன்னும் வரும் என சர்வாதிகார ஆணவத்தோடு சட்டசபையில் தெரிவித்துள்ளதை அதிமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்கள் எண்ணங்களுக்கு விரோதமாக அறிவிப்புகளை வெளியிடும் முதலமைச்சரை தட்டிக்கேட்காமல், சட்டமன்றத்தில் இருக்கக்கூடிய அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் வாய்மூடி மவுனம் காப்பது ஏன்? என்ற சந்தேகம் எழுகிறது.

சிலிண்டருக்கு மானியம், பெண்களுக்கு உதவித்தொகை, இலவச பஸ் பயணம் என மாயாஜால அறிவிப்புகளை வெளியிடும் முதலமைச்சர், மறுபுறம் புதுச்சேரி மாநிலத்தை சுடுகாடாக மாற்றும் திட்டங்களை தடையின்றி நிறைவேற்றி வருவது வேதனையளிக்கிறது. மதுக்கடைகளின் மூலம் வரும் வருவாயில்தான் திட்டங்களை நிறைவேற்ற முடியும் என பசப்பு அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டு வருகிறார்.

*பூரண மதுவிலக்கை அமல்படுத்தியுள்ள குஜராத் போன்ற மாநிலங்கள் வளர்ச்சி பெறவில்லையா? அங்கு தொழிற்சாலைகள் இல்லையா? அங்கு மக்கள் நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படவில்லையா?*

புதுச்சேரி தாய்மார்கள் கூறியதை போல, மாநிலத்தை சேர்ந்த அனைத்து குடும்பத்தையும் பற்றி முதலமைச்சர் சிறிதளவாவது சிந்தித்து பார்க்க வேண்டும். நமது வீட்டில் உள்ள பெண் குழந்தைகள் மது அருந்திவிட்டு, சாலையில் ஆட்டம் போடுவதை முதலமைச்சர் ரசிப்பாரா? கண்டிப்பாரா?

ரெஸ்டோ பார்கள் என்ற கவர்ச்சி நடன மது பார் திட்டம் புதுச்சேரி மாநிலத்திற்கு முதலமைச்சரால் வழங்கப்படும் மிகப்பெரும் சாபக்கேடு. பெரும் சக்தியாக திகழும் புதுச்சேரி தாய்மார்களின் வேதனை, வயிற்றெரிச்சல் ஆட்சியாளர்களை சுட்டெரித்துவிடும். எனவே ரெஸ்டோ பார்கள் எனப்படும் கவர்ச்சி நடன மதுபார்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து அனுமதியையும் முதலமைச்சர் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.


கருத்துகள்