ரேஷன் கடைகளை திறக்க வலியுறுத்தி முதல்வர் ரங்கசாமி வீட்டை ரேஷன் கடை ஊழியர்கள் 100கும் மேற்பட்டோர் குடும்பத்தினருடன் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறக்க வேண்டும், நிலுவையில் உள்ள 53 மாத சம்பளத்தை வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் கடந்த 5 வருடங்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் தங்களது குடும்பத்தினருடன், ரேஷன் கடைகளை திறக்க வலியுறுத்தி, கோரிமேட்டில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு வந்தனர்.முதல்வர் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்ததால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஊழியர்கள் முதல்வர் வீட்டின் முன்பு காத்திருந்தனர். விளையாடிவிட்டு வந்த முதல்வர் ரங்கசாமியிடம், மீண்டும் ரேஷன் கடைகளை திறக்க வேண்டும் என்றும், 53 மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என்றும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். அனைவரும் ஒரு சேர கூச்சலிட்டதால், கோபமடைந்த முதல்வர் ரங்கசாமி, 53 மாதங்களாக எங்கே சென்றீர்கள் என்றும், யார் தூண்டுதலின் பேரில் இங்கே வந்தீர்கள் என்றும் உங்கள் துறை அமைச்சரை போய் பாருங்கள் என கோபமாக பேசிவிட்டு வீட்டினுள் சென்று விட்டார்.
முதல்வரின் பேச்சை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், கோரிமேடு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் ஊழியர்களை கைது செய்தனர். புதுச்சேரியில் முதல்வர் இல்லத்தை ரேஷன் கடை ஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக