முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மக்களுக்கு எதிரான திட்ங்களை செயல்படுத்தும் முதல்வர் ரங்கசாமி.! அதிமுக குற்றச்சாட்டு.!

புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., திரு.வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசும், ஆட்சியாளர்களும் ஊழல், முறைகேடு அற்ற வெளிப்படையான, நம்பகத்தன்மைக்கு உகந்த ஆட்சியை தர வேண்டும். ஆனால் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான இந்த அரசு புதுச்சேரி மக்களிடம் நம்பகத்தன்மையை நாள்தோறும் இழந்து வருகிறது.

புதுச்சேரி மாநில மக்களின், இளைஞர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கும் திட்டங்களுக்கு எந்தவித தயக்கமும் இன்றி முதலமைச்சர் அனுமதி அளித்து வருகிறார். புதுச்சேரி மக்களையும், மாநிலத்தையும் பாதுகாப்பதே தனது கடமை, அரசு ஊழியர்களின் நலனை பாதுகாப்போம் என மேடைக்கு மேடை வாய் ஜம்பமாக பேசுகிறார். அதேநேரத்தில் மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி, கவர்ச்சி நடன மதுபார்களுக்கு அனுமதி, மின்துறை தனியார்மயம் என புதுச்சேரி மாநில மக்கள், அரசு ஊழியர்களின் நலனுக்கு எதிரான திட்டங்களை சிறிதும் கவலையோ, அச்சமோ இன்றி தொடங்குகிறார்.

தவறுகளை தட்டிக்கேட்கும் தாய்மார்களிடம், முதியோர் உதவித்தொகை, பெண்களுக்கு மாதம் ரூ.ஆயிரம் வழங்கும் திட்டத்தை சுட்டிக்காட்டி, இதற்கு நிதி எங்கிருந்து வரும்? மாநில நிதியை பெருக்க மக்களை பாதிக்கும் திட்டமாக இருந்தாலும் நான் அனுமதியளிப்பேன் என வியாக்ஞானம் பேசி வருகிறார். முதலமைச்சரின் இந்த பேச்சால், அரசிடம் சலுகைகளை பெற புதுச்சேரி தாய்மார்கள் கூனிக்குறுகி நிற்கிறார்கள்.

அரசின் ஒவ்வொரு ஒப்பந்தமும், திட்டமும் எந்த வகையில் நமக்கு பாதிப்பை ஏற்படுத்துமோ? என்று புதுச்சேரி மக்கள் அஞ்சி பதட்டத்துடன் வாழும் சூழ்நிலையை முதலமைச்சர் ஏற்படுத்தியுள்ளார். தற்போது அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, சவுதிஅரேபியாவை சேர்ந்த கார்ப்பரேட் முதலாளிகளுடன் முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

புதுச்சேரியில் படித்த இளைஞர்கள் அண்டை மாநிலங்களில் கிடைத்த வேலைக்கு கொத்தடிமைகளாக சென்று வேலை பார்த்து வருகின்றனர். புதுச்சேரியில் ஜவுளிபூங்கா, தகவல் தொழில்நுட்ப பூங்கா உட்பட பல்வேறு தொழிற்சாலைகளை கொண்டுவருவது அத்தியாவசிய தேவை. புதுச்சேரி மாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் தொழிற்சாலைகளை கொண்டுவர வேண்டும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை.

ஆனால் கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளுடன், முதலமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தை புதுச்சேரி மாநில மக்களுக்கு, இளைஞர்களுக்கு ஆக்கப்பூர்வமான நோக்கில் நடந்துள்ளதா? என்ற சந்தேகமும் எழுகிறது. இந்த சந்திப்பு சுயநல நோக்கின்றி புதுச்சேரி மாநில மக்களின் நலனுக்காகவும், வேலைவாய்ப்புக்காகவும் இருக்க வேண்டுமே தவிர, ஊழல், முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் திட்டங்களாக இருக்கக்கூடாது.

எனவே புதுச்சேரி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுடன் என்ன பேச்சுவார்த்தை நடத்தியது? என்ன தொழிற்சாலைகள் வரப்போகிறது? தகவல் தொழில்நுட்ப ஆலைகளா? சாராய ஆலைகளா? ரசாயன ஆலைகளா? இதற்காக புதுச்சேரி அரசு அவர்களுக்கு தரப்போகும் சலுகைகள் என்ன? அவர்களுக்கு இலவசமாக மின்சாரம் தரப்போகிறீர்களா? வரி விலக்கு தரப்போகிறீர்களா? தண்ணீர் வழங்கப்போகிறீர்களா? மக்கள் வரிப்பணத்தில் புதுச்சேரி அரசு வாங்கிய நிலங்களை இலவசமாக வாரி வழங்கப்போகிறீர்களா? என்பதை வெளிப்படையாக தெரிவித்து, பிரெஞ்சு இந்திய ஒப்பந்தப்படி கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி, அனைத்து தொகுதியை சேர்ந்த, புதுச்சேரி மாநில மக்களிடம் ஒப்புதல் பெற வேண்டும் என புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.


கருத்துகள்