புதுச்சேரியின் அண்டை மாநிலமான தமிழகத்தை சேர்ந்த விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த ஆதரவற்றோர் ஆசிரமம் மிகப்பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இங்கு சேர்க்கப்பட்ட மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். பணத்திற்காக ஆதரவற்றோரின் உடல் உறுப்புகள் திருடப்பட்டு, கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஆசிரமத்திலிருந்து சுமார் 300 பேர் மீட்கப்பட்டுள்ளனர், மாயமான 16 பேர் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
புதுச்சேரியிலும் பல அரசு மற்றும் தனியார் காப்பகங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், சிறுவர் இல்லங்கள் செயல்பட்டு வருகிறது. அரசின் அனுமதி பெற்று பல காப்பகங்கள் சிறப்பான சேவையை செய்து வருகின்றன. அதேநேரத்தில் சில காப்பகங்கள் அனுமதியின்றி லாபநோக்கோடு செயல்படுவதாக அவ்வப்போது புகார்கள் எழுந்து வருகின்றன. ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்ப்பவர்களிடம் அதிக பணம் வசூலிக்கப்பட்டாலும், முதியோருக்கு உரிய சிகிச்சை, அடிப்படை வசதிகள் செய்துதருவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
புதுச்சேரியல் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு மீட்கப்படும் சிறுமிகள், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு மீட்கப்பட்ட இளம்பெண்கள் பலர் இதுபோன்ற காப்பகங்களில்தான் தங்க வைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உரிய பாதுகாப்பும், மறுவாழ்வுக்கான வாய்ப்புகள் வழங்கப்படுகிறதா? என்ற சந்தேகம் நிலவுகிறது.
புதுச்சேரியில் மணக்குள விநாயகர் கோவில், இருதய ஆண்டவர் பசிலிக்கா, தர்கா உட்பட பல இடங்களில் நூற்றுக்கணக்கில் ஆதரவற்றோர் சாலையோரங்களில் வசிக்கின்றனர். இவர்கள் எங்கிருந்து வருகின்றனர்? யார் இவர்களை புதுச்சேரியில் கொண்டு வந்து விடுவது? என்பது மர்மமாகவே உள்ளது. ஜி20 மாநாடு நடைபெற்றபோது, சாலைகளில் இருந்த ஆதரவற்றோர், யாசகம் பெறுவோரை போலீசார் வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்துச்சென்று காப்பகத்தில் சேர்த்தனர். காப்பகத்தில் அவர்களுக்கு தேவையான உணவு, இருப்பிடம் என எதையும் வழங்கவில்லை. மாநாட்டுக்கு பின் புதுச்சேரி அரசு அதிகாரிகள் அவர்களை கண்டுகொள்ளவில்லை. இதனால் காப்பகங்களில் இருந்து வெளியேறியவர்கள், மீண்டும் சாலையோரங்களில் பொதுமக்களிடம் யாசகம் பெற்று வாழ்க்கை நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில் ஒவ்வொரு சிக்னல்களிலும் பச்சிளம் குழந்தைகளுடன் யாசகம் பெற இளம்பெண்களும், முதியோரும் கையேந்தி நிற்பது மிகவும் கொடுமையானது.
ஜி20 மாநாட்டின்போது சாலைகளை தூய்மைப்படுத்திய துப்புரவு பணியாளர்களை பாராட்டிய முதலமைச்சர், இந்த பணியை ஆண்டுமுழுவதும், எப்போதும் தொடர்ந்து புதுச்சேரியை அழகாக வைத்திருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். முதலமைச்சர், ஆதரவற்றோர், யாசகம் பெறுவோர் விஷயத்திலும் அதே கண்டிப்பான அறிவுரையை புதுச்சேரி அரசு அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும் என அதிமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காப்பகங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், ஆசிரமங்கள், சிறுவர் இல்லங்களை அரசு அதிகாரிகள் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். சாலைகளில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டோரை அரசு காப்பகங்களில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும். சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு மறுவாழ்வு ஏற்பாடுகளை செய்துதர வேண்டும். சிக்னல்தோறும் யாசகம் பெறுவோரை தடுத்து நிறுத்தி புதுச்சேரியை சீர்மிகு நகரமாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதியின்றி செயல்படும் காப்பகம், ஆசிரமம், இல்லங்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து ஆதரவற்றோர்களுக்கு தேவையான அரவணைப்பை அளிக்க வேண்டும் என புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக