ஒன்றிய பாஜக அரசு பேச்சுரிமை, கருத்துரிமையை நசுக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அரசு விழா ஒன்றில் பேசும்போது கவர்னரை மிக மோசமாக விமர்சனம் செய்கின்றீர்கள். அவ்வாறு விமர்சித்தால் இனி விமர்சிக்க முடியாத அளவுக்கு நடவடிக்கைகள் இருக்கும் என்று மிரட்டியுள்ளார். இதனை வன்மையாக கண்டிக்கின்றோம். அரசியல் கட்சி தலைவர்களுக்கு விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருக்க வேண்டும்.
மக்களை சந்தித்து அதிகாரத்திற்கு வருபவர்களுக்கு அந்த பக்குவம் இருக்கும். அவ்வாறு வராதவர்களுக்கு அந்த பக்குவம் இருக்காது என்பதை கவர்னர் தனது பேச்சு மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். அதுபோல் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல்வாதிகளுக்கு அந்தப்பக்குவம் இருக்கும் என்பதையும் அவரே அந்த விழா பேச்சில் தெரிவித்துள்ளார். அதாவது பிரதமர் மோடியிடம் சுறு, சுறுப்புக்கான காரணம் குறித்து எழுப்பிய கேள்விக்கு விமர்சனங்களை சாப்பிடுவதால்தான் நான் சுறு, சுறுப்பாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
எனவே பிரதமர் மோடி கூறியபடி அனைத்து விமர்சனங்களையும் (சாப்பிட) ஏற்றுக் கொள்ள கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பழக வேண்டும். அதன் மூலம் மட்டுமே நாம் செல்லும் பாதை எவ்வளவு தவறானது என்பதையும் உணர முடியும். அதற்கு மாறாக என்னை (கவர்னரை) கடுமையாக விமர்சித்தால் இனி விமர்சிக்கவே முடியாத சூழல் ஏற்படும் என்றெல்லாம் மிரட்டுவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. ஜனநாயகத்திற்கும், பேச்சுரிமைக்கும் எதிரானது. மேலும் மோசமாக விமர்சனம் செய்பவர்களை மேலும் மோசமாக விமர்சனம் செய்யவே தூண்டும். எனவே அரசியல்வாதிகளுக்கு எதிலும் நிதானம் தேவை என்பதை கவர்னர் தமிழிசை உணர்ந்து விழாக்களில் பேச வேண்டும். மாறாக அடக்குமுறையை பிரயோகிக்க நினைத்தால் அது எதிர்விளைவையே ஏற்படுத்தும் என்பதையும் கவர்னருக்கு வேண்டுகோளாக வைக்கின்றேன். மேலும் உடனடியாக விமர்சித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கூற்றை திரும்பப்பெற வேண்டும் என்றும் கவர்னர் தமிழிசையை கேட்டுக் கொள்கிறேன்.
கவர்னர் எல்லாம் தகுதியுடன் பொறுப்புக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகளுக்கு தகுதி என்பது மக்களை சந்தித்து ஓட்டுக்களை பெற்று வெற்றி பெற்று வருவதுதான். ஆனால் கவர்னர் யாரும் அதுபோல் வெற்றி பெற்று பொறுப்புக்கும் வரவில்லை. எனவே கவர்னர்களுக்கான எல்லையை உணர்ந்தும் கவர்னர்கள் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக