முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதிய மதுபான தொழிற்சாலைகள் மற்றும் கடை உரிமங்களை ரத்து செய்ய வேண்டும்;பாஜக

புதுச்சேரி பாஜக மாநில தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக, ஆர்.காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி அமைத்து தேசிய ஜனநாயக கூட்டணியாக தேர்தலை சந்தித்தது. எங்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக மாநில துணை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு.வையாபுரி மணிகண்டன் மற்றும் பாஜக ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் திரு.சிவசங்கர் ஆகியோர் சில நாட்களுக்கு முன்பு கட்சி தலைமை அலுவலகத்தில் என்னை சந்தித்து கடிதம் அளித்தனர். அதில் மதுபான கொள்கையில் புதுச்சேரி பாஜகவின் நிலைப்பாடு என்ன? என்பது பற்றி வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என கோரியிருந்தனர்.

இந்தியா முழுவதும் மதுவுக்கு எதிரான கொள்கைதான் பாஜகவின் கொள்கை. புதுச்சேரி மாநில பாதுகவும் அதே கொள்கையோடுதான் செயல்பட்டு வருகிறது. புதச்சேரி கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் 12 பாஜக மற்றும் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடும் இதுதான். புதுச்சேரி மாநில மக்களின் மனநிலையும் மதுவுக்கு எதிராகத்தான் உள்ளது. இதனால்தான் மக்கள் திரண்டு போராட்டம் நடத்துகின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் என்.ஆர்.காங்கிரஸ் மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என பாஜக சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு மக்களின் எண்ணங்களுக்கு எதிராக வழங்கப்பட்ட 5 மதுபான தொழிற்சாலைகள், 250 க்கும் மேற்பட்ட சுற்றுலா மதுபான உரிமங்களுக்கான அனுமதியை உடனடியாக ரத்து செய்வதற்கான உத்தரவை கூட்டணிக்கு தலைமை வகிக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு.ரங்கசாமி அவர்கள் பிறப்பிக்க வேண்டும் என பாஜக சார்பில் வலியறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் விரைவில் அனைத்து பிரச்சனைகளுக்கும் முதலமைச்சர் சுமூகமான தீர்வு காண வேண்டுமென பாஜக விரும்புகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது..

கருத்துகள்