விடுமுறை நாட்களில் பள்ளி நடத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்குமா அரசு..! மாணவர் கூட்டமைப்பு கேள்வி.?
புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சீ.சு.சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதுச்சேரி மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமையில் கூட பள்ளிகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் தைரியம் அரசுக்கு இருக்கிறதா?
புதுச்சேரி மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமையிலும் சில தனியார் பள்ளிகள் தங்களது பள்ளிகளில் மாணவர்களுக்கான வகுப்புகளை எடுத்து வருகின்றனர். மாணவர்களுக்கு இது மிகப்பெரிய மன உளைச்சலை உருவாக்கும். கல்வி என்ற போர்வையில் மாணவர்களை மிக மோசமான மன அழுத்தவாதிகளாக மாற்றுவதால் தான் பள்ளி கல்லூரியில் படிக்கக்கூடிய மாணவர்கள் கூட தடுமாறக்கூடிய நிலை ஏற்படுகிறது. இது தொடர்பாக அரசின் கவனத்திற்கு பலமுறை எடுத்துச் சென்றோம். கல்வித்துறையோ, மாநில அரசோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது புதுச்சேரி மாநிலத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கக் கூடிய தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக மாறி தொடர்ந்து சனிக்கிழமைகளில் நடத்தி வந்த வகுப்புகள் தற்போது ஞாயிற்றுக்கிழமைகளும் நடக்கிறது. ஒருநாள் கூட ஓய்வில்லாமல் படிக்கும் மாணவன் எவ்வாறு மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் இருப்பான் .
கொரோனா பொது முடக்கத்திற்கு பின்னர் மாணவர்கள் கடுமையான மன உளைச்சலில் இருக்கிறார்கள். அடிப்படையில் கற்க வேண்டிய பலவற்றை சிரமப்பட்டு கற்கிறார்கள். ஆசிரியர்களும் பாடங்களை எடுப்பதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். பெற்றோர் மட்டுமின்றி ஆசிரியர்களின் குடும்பத்தினரும் ஞாயிற்றுக்கிழமை பள்ளிகள் நடத்துவதால் மிகுந்த நெருக்கடிகளுக்கு தள்ளப்படுகிறார்கள்.
மேலும் இது போன்ற தனியார் பள்ளிகள் மீது புகார்கள் கொடுக்கும் போதெல்லாம் கல்வித்துறை ஒரு நாடக சுற்றறிக்கையை வெளியிடுவதும் பின்பு கல்வித்துறையின் சுற்றறிக்கை மதிக்காமல் தொடர்ந்து இது போன்ற பள்ளிகள் நடத்தும் தனியார் பள்ளிகளின் மீது இது நாள் வரை எந்த ஒரு நடவடிக்கையும் அரசு எடுத்ததில்லை.
ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை எடுத்து வீடுகளில் ஓய்வெடுக்கும் கல்வி துறையைச் சார்ந்த அதிகாரிகள் அவர்களது துறையைச் சார்ந்த தனியார் பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் ஓய்வு எடுக்கிறார்களா என்பதை ஆய்வு செய்யாதது ஏன் என்ற கேள்வியை எமது அமைப்பு வைக்கிறது.
எனவே புதுச்சேரி அரசு மற்றும் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு ஞாயிறு தினங்களிலும் பள்ளிகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கையை எடுத்து மாணவர்களையும் ஆசிரியர்களையும் பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக