புதுச்சேரி மாநிலத்தில் கூட்டுறவு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் அனைத்தும் லாபத்தில் இயங்கும் வகையிலே நிறுவப்பட்டன என்றும், ஆனால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள், அலுவலர்களின் செயல்பாட்டால் அவைகள் நஷ்டத்தில் இயங்கும் நிலைக்கு ஊழியர்களே காரணம் என குற்றம் சாட்டி கடந்த சனிக்கிழமை 19.11.2022 நடந்த கூட்டுறவு ஆண்டு விழாவில் முதலமைச்சர் அவர்கள் பேசியுள்ளார். ஆட்சி பொறுப்பில் இருந்து பொதெல்லாம் கூட்டுறவு இலாக்காவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த முதலமைச்சர் தனது பொறுப்பை உணராமல் பேசுவது என்பது கண்டனத்துக்குறியது. பாண்லே, பாப்ஸ்கோ, பாசிக், பாண்டெக்ஸ், பாண்பேப், கான்பேட், அமுதசுரபி போன்ற பல்வேறு நிறுவனங்களில் திரு.ரங்கசாமி அவர்கள் தன்னுடைய தொகுதி சார்ந்தவர்களை உரிய தொழில் திட்டம் இல்லாமல் வேலைக்கு அமர்த்தி இந்த நிறுவனங்கள் மீது பெரும் சுமையை ஏற்படுத்தினார். அதிகாரிகளும், முதலமைசரின் உத்தரவை கேட்டு இவர் அனுப்பிய ஆட்களை எல்லாம் பணியில் அமர்த்தி அலுவலகத்தில் இடம் இல்லாமல் மரத்தடியிலும், படிக்கட்டுகளிலும் உட்காரவைத்து சம்பளம் வழங்கப்பட்டுவந்தது. பாண்லே நிறுவனத்தில் தேவைக்கு அதிகமான ஆட்களை பணியில் அமர்த்தியது யார்?
தற்பொழுது பணி ஓய்வு பெற்று சென்ற அதிகாரியை பாண்லேவில் பணியமற்த்தி சம்பளம் கொடுக்க சொல்வது யார்?
இத்தனை ஆண்டுகள் நல்ல லாபத்தில் இயங்கிவந்த பாண்லே நிறுவனம் தற்போது நஷ்டத்தில் இயங்குவதற்கு யார் காரணம்?
1 லிட்டர் பால் ரூ.42-க்கு வாங்கி இந்த பாலினை பதப்படுத்தி விற்பனைக்கு ஏற்றி செல்லும் வாகன செலவு, ஊழியர்களின் சம்பளம் என கணக்கிட்டால் ஒரு லிட்டரின் பால் விலை ரூ.48/- அடக்கமாகிறது. ஆனால் அரசு பொதுமக்களுக்கு ரூ.44/-க்கு விற்கசொல்கிறது. இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.7.5 லட்சம் இழப்பு ஏற்பட்டு மாதத்திற்கு ரூ.2.25 கோடி இழப்பிற்கு யார் காரணம்?
இதனால் கடன்சுமை ஏற்பட்டு பாண்லே நிறுவனத்திற்கு பால் சப்ளை செய்து வந்தவர்களுக்கு பணம் கொடுக்கப்படாமல் ரூ.15 கோடி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இவர்கள் பால் சப்லைசெய்வதை நிறுத்திக் கொண்டனர். பால் தட்டுப்பாடு காரணமாக, பாண்லே நடத்திவந்த பார்லர்கள் தற்பொழுது மூடிவைக்கப்பட்டு, தொழிலாளர்கள் வேலையின்றி இருந்து வருவதற்கு யார் காரணம் ?
கடந்த காலங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட இலவச மிக்சி, கிரைண்டர்கள் வழங்குவதர்கான அமுதசுரபியில் கொல்முதல் செய்யப்பட்ட ரூ.4.5 கோடி பணத்தை கொடுக்காமல் இருப்பதற்கு யார் காரணம் ?
2 கோடி மதிப்புள்ள மிக்சி, கிரைண்டர்கள் குடோனில் மக்கிக்கிடப்பதற்கு வைக்கப்பட்டு உள்ளதற்கு யார் காரணம்?
அமுதசுரபி நடத்திவரும் பெட்ரோல் பங்க்குகளில் அரசு வாகனங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் போட்டுவிட்டு பணம் கொடுக்கப்படாமல் இருப்பதற்கு யார் காரணம் ?
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும், கட்டிட தொழிலாளர்களுக்கும் தீபாவளிக்கு இலவச பரிசு கூப்பன் வழங்கி அமுதசுரபியில் பொருட்களை வாங்க செய்து, கொடுத்த பொருட்களுக்கு பணம் கொடுக்காமல் இருப்பதற்கு யார் காரணம் ?
பாண்டெக்ஸ், பாண்பேப் நிறுவனங்களின் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக, கைலி, புடவை மற்றும் துண்டு போன்றவைகளை வாங்கி வழங்கிவிட்டு இதற்கான பணம் கொடுக்காமல் இருப்பதற்கு யார் காரணம் ?
இந்த நிலையில் மீண்டும் அடுத்த ஆண்டு பொதுமக்களுக்கு கொடுப்பதற்கு கைலி, துண்டு, சேலை ஆகியவைகளை பாண்டெக்ஸ், பாண்பேப் மூலம் உற்பத்தி செய்ய உத்தரவிட்டு உற்பத்தி செய்த துணிவகைகளை வாங்கி கொடுக்காமல் உள்ளதால் ரூ.1.5 கோடி அளவிற்கு துணிவகைகள் தேங்கி வினாக்கியது நியாயம் தானா?
துணிகளுக்கு பதில் பணமாக வங்கி கணக்கில் செலுத்திவிட்டு கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் மீது குற்றம் சுமத்துவது நியாயம் தானா?
இவைகளை வாங்கி கொடுக்காமல் துணிக்குபதில் பொதுமக்களுக்கு பணமாக வங்கியில் செலுத்தப்பட்டதற்கு யார் காரணம்?
அமுதசுரபி, காண்பெட், பாசிக், பாப்ஸ்கோ போன்ற நிறுவனங்களுக்கு 60-க்கும் மேற்பட்ட மதுபான உரிமங்கள் (IMFL License) வழங்கி கடைகளை திறக்க செய்து அதில் அளவுக்கு அதிகமாக ஆட்களை அமர்த்தி ஓடாத மதுபான வகைகளை வாங்கி கடையில் வைத்து விற்க சொன்னது யார்?
பாப்ஸ்கோ நிறுவனம் நடத்திவந்த LPG காஸ், சத்துமாவு தயாரித்தல், பொதுவினியோகத்திற்கான அரிசி வாங்கி கொடுப்பது, பள்ளிகளுக்கு காய்கறி சப்லை, காய்கறிகடைகள், தீபாவளிபஜார் மற்றும் பெட்ரோல் பங்க் போன்றவற்றை நடத்தி வந்தார்கள். இந்த நிறுவனத்திற்கு வாரியத்தலைவர்கள் நியமித்து அவர்களுக்கு அலுவலக செலவு, சம்பளம், கார் மற்றும் பெட்ரோல், D.A என கொடுத்து அழகுபார்த்தது யார்?
மேலும் வாரியதலைவர்களாக இருந்தவர்கள் டீசல் மற்றும் பெட்ரோல் போன்றவைகளை பாப்ஸ்கோ பங்குகளில் வாங்கி தங்களின் சொந்த வாகனங்களுக்கு பயன்படுத்தி வந்ததை வேடிக்கை பார்த்தது யார்?
தீபாவளி பஜாரில் லட்சக்கணக்கில் பட்டாசுகளை பெற்று பணம் கொடுக்காமல் இருப்பதற்கு யார் காரணம் ?
இந்த நிறுவனங்களுக்கு பல்வேறு வகையில் ஆட்சியில் இருப்பவர்கள் நஷ்டத்தை ஏற்படுத்தி பாப்ஸ்கோ நிறுவனத்தை முடக்கி வைத்தது யார்?
இந்த நிறுவனங்களில்யெல்லாம் திரு.ரங்கசாமி அவர்கள் அமைச்சராகவும் மற்றும் முதலமைச்சராகவும் இருக்கும் போதுதான் அளவுக்கு அதிகமாக ஆட்களை வைக்கப்பட்டது, நீதி மன்றம் தலையிட்டு கூடுதலாக வைக்கப்பட்ட ஆட்களை பணிநீக்கம் செய்து வெளியேற்றப்பட்டதை அனைவரும் அறிந்ததே. திரு.ரங்கசாமி தனது தொகுதியை சார்ந்தவர்களை வேளைக்கு வைப்பதற்காகவே பல்வேறு திட்டங்களை கொண்டுவந்து ஆட்களை பணியில் அமர்த்தப்பட்டதால், பிறகு கொண்டு வந்த திட்டங்கள் கைவிடப்பட்டது. இதற்காக பணியில் அமர்த்தப்பட்டவர்கள் வேலையில்லாமல் உட்கார வைத்து சம்பளம் கொடுத்ததற்கு யார் காரணம்?
அரசு சார்பு அனைத்து நிறுவனங்களுக்கு வாரிய தலைவர்களை நியமித்து, சம்பளம், அலுவலக ஊழியர்களின் சம்பளம், கார் இதற்கான டீசல், பயனப்படி, பணியாட்கள் சம்பளம் மற்றும் சலுகைகளை கொடுத்து இந்த நிறுவனத்தின் மீது மேலும் சுமை ஏற்றி நலிவடைய செய்ததற்கு யார் காரணம் ?
இதுபோல் பல நிறுவனங்கள் சீரழிந்து ஊழியர்களின் வேலை பரிபோகியும், வேலை செய்யக்கூடிய ஊழியர்களுக்கு ஆண்டுகணக்கிள் சம்பளம் கொடுக்காமல் இருந்துவரும் இத்தகைய அவலநிலைக்கு திரு.ரங்கசாமி மற்றும் அதிகாரிகளின் நிர்வாக திறமையின்மை காரணம் என்பது தான் நிதர்சனமான உண்மை. இவைகளை எல்லாம் மறைப்பதற்கு ஊழியர்களின் மீது குற்றம் சுமத்துவதை வன்மையாக ஏஐடியூசி கண்டிக்கிறோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக