முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தவறிழைத்த ஆசிரியர்களுக்கு துணை செல்வது ஆட்சியாளர்களுக்கும், ஆட்சிக்கும் மிகப்பெரிய கேடு-அதிமுக கண்டனம்..!

புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன், Ex.Mla., வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை:


புதுச்சேரி மாநிலத்தில் அரசு துறைகளில் பணிபுரியும் பெண்கள், பள்ளி மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமை தாக்குதல் அதிகரித்து வருவது மிகவும் கண்டனத்திற்குரியது. கட்டண கொள்ளையால் தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க முடியாத ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெற்றோர் தங்கள் குழந்தைகளை அரசு மற்றும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். சமீபத்தில் முதலியார்பேட்டையில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அப்போதே கல்வித்துறை விழித்துக்கொண்டு, மாநிலம் முழுவதும் அரசு பள்ளி மாணவிகளிடம் முழுமையான விசாரணை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் எந்த விஷயத்தையும் மூடி மறைக்கும் வேலையை மட்டுமே புதுச்சேரி கல்வித்துறை செய்து வருவது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

புதுச்சேரி அரசு பள்ளியில் நடந்த பெற்றோர், ஆசிரியர் சந்திப்பு கூட்டத்தில், மாணவிகளிடம் குறிப்பிட்ட சில ஆசிரியர்கள் தவறாக நடக்க முயற்சிப்பதாக புகார் கூறியுள்ளனர். ஆனால் இந்த விஷயத்தை பள்ளி நிர்வாகமும், கல்வித்துறையும் மூடி மறைக்க முயற்சித்துள்ளது. இதை கண்டித்து பெற்றோர்கள், எழுத்துப்பூர்வமாக கல்வித்துறையிடம் புகார் அளித்தபின் 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையை பெற்றோர்கள் முதலில் புகார் கூறியபோதே ஏன் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவில்லை? என்பது பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. பெற்றோர்களால் பாலியல் புகார் கூறப்பட்ட மேலும் 2 ஆசிரியர்கள் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் நிர்பந்தம் காரணமாக இந்த சம்பவத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி காவல்துறை உடனடியாக ஆசிரியர்கள் மீது தானாக முன்வந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டும், அதையும் செய்யவில்லை. இச்சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் புதுச்சேரி அரசு பள்ளிகள் மீதான நம்பிக்கையை சீர்குலைத்துள்ளது. இதை புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். 

*பெண் குழந்தைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்கள், சம்பவத்தை மூடி மறைக்க முயற்சித்த கல்வித்துறை உயரதிகாரிகள் அனைவர் மீதும் உடனடியாக போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்த வேண்டும். மாணவிகளை தனியே அழைத்துப்பேசி அவர்களின் குறைகளை களைய வேண்டும். மாணவிகள், பெற்றோர் புகார் கூறும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் புதுச்சேரில் பெண் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.*

புதுச்சேரியில் நடைபெற்றுள்ள மாணவிகள் மீதான பாலியல் தொந்தரவு குறித்து தேசிய குழந்தைகள் நல கமிஷன் நேரடியாக விசாரணை நடத்த வேண்டும். அரசியல் பின்புலத்தால் குற்றங்களில் இருந்து தப்பிக்க நினைக்கும் ஆசிரியர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். தவறிழைத்த ஆசிரியர்களுக்கு துணை செல்வது ஆட்சியாளர்களுக்கும், ஆட்சிக்கும் மிகப்பெரும் கேடு என்பதை எச்சரிக்கையாக தெரிவிக்கிறோம்.



கருத்துகள்