முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அரசு அறிவித்துள்ள ஹெல்மெட் கட்டாய உத்தரவை வாபஸ் பெற வேண்டும் -அதிமுக வலியுறுத்தல்..!

புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பதவி வரும்போது பணிவும், பதவி பெற்ற பின் அளித்த வாக்குறுதிகளும் நினைவுக்கு வரவேண்டும். பதவிக்கு வருவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு, அளித்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிடுவது மக்களை வேதனையில் ஆழ்த்தும். என்ஆர்.காங்கிரஸ் அளித்த தேர்தல் வாக்குறுதியில் நகராட்சி எல்லைக்குள் ஹெல்மெட் அணிவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என அறிவித்திருந்தது. தற்போது நாளை நவம்பர் 1ம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். அந்த வாகனத்தில் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் போக்குவரத்து போலீசார் அபராதம் வசூலிப்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றாட கூலி தொழிலாளர்கள், நடுத்தர மக்கள், சொற்ப சம்பளத்தில் பணியாற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் தங்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த பொருளாதார போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகும். போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் பல இளைஞர்கள் சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஹெல்மெட் அணிந்துகொண்டு தனியே நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு, வழிப்பறி, ஆள் கடத்தல், மிரட்டல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஹெல்மெட் அணிந்து வரும் குற்றவாளிகளை கண்டறிய முடியாமல், காவல்துறையினர் திணறி வருகின்றனர். இந்நிலையில் கட்டாய ஹெல்மெட் உத்தரவு சமூகவிரோத, சட்ட விரோத செயல்களை மேலும் ஊக்குவிப்பதாகவே அமையும்.

விபத்துக்களை தடுக்க ஹெல்மெட் கட்டாயமாக்கப்படுவதாக காரணம் கூறப்படுகிறது. சுப்ரீம்கோர்ட் உத்தரவுப்படி அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதில் அதிமுகவுக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் சாலை விபத்துகளை ஏற்படுத்தும் காரணங்களை கண்டறிந்து களையாமல், தான்தோன்றித்தனமாக ஹெல்மெட் மீது பழிபோடுவது ஏற்புடையதல்ல. புதுச்சேரி நகர பகுதி முழுவதும் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. நகர பகுதியில் 20 கிமீ வேகத்துக்கு மேல் செல்லவே முடியாத சூழ்நிலை உள்ளது. சாலை பள்ளங்களில் விழுந்து அரசு பணியாளர்கள், குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் பெற்றோர்தான் படுகாயமடைகின்றனர். சாலைகளை அகலப்படுத்த அரசு அக்கறை காட்டவில்லை. மக்களிடம் சாலை விபத்துகள் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முன்வரவில்லை.

இதைவிடுத்து ஹெல்மெட் அணிவதால் மட்டுமே அனைத்தையும் தடுக்க முடியும் என அறிவித்திருப்பது உள்நோக்கம் கொண்டதாகவே உள்ளது. மக்கள் நலனுக்காக நடைபெற வேண்டிய ஆட்சியில், யாரோ சிலருக்கு மட்டும் வருமானத்தை ஈட்டித்தரும் வகையில் திட்டங்கள் தீட்டப்படுவது தொடர்கதையாகவே உள்ளது. இது மக்கள் புரட்சியைத்தான் ஏற்படுத்தும். எனவே அரசு அறிவித்துள்ள ஹெல்மெட் கட்டாய உத்தரவை வாபஸ்பெற்று, பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வர வேண்டும்.


கருத்துகள்