முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முதலமைச்சர் பதவி விலக கோரி பாஜக, ஆதரவு எம்எல்ஏக்கள் போராட்டம்!

திருபுவனை தொகுதியில் எந்தவித பணிகளும் செய்ய விடாமல் தடுக்கும் முதலமைச்சர் ரங்கசாமி பதவி விலக வலியுறுத்தி, சுயேச்சை எம்எல்ஏ அங்காளன் சட்டமன்ற வாயிலில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

புதுச்சேரி திருபுவனை தொகுதி சுயேச்சை சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அங்காளன். சுயேச்சையாக இருந்தால் தொகுதியில் வளர்ச்சி பணிகள் தடைப்படும் என தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவிற்கு ஆதரவளித்து வருகிறார்.

 கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தனது தொகுதி புறக்கணிக்கப்படுவதாகவும், எந்தவித நலத்திட்ட உதவிகளையும், அரசு திட்டங்களையும் செயல்படுத்த விடுவதில்லை எனவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்தநிலையில் இன்று தனது தொகுதி மக்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் சட்டமன்றத்திற்கு வந்த அங்காளன், சட்டப்பேரவை வாயிலில் அமர்ந்து, முதலமைச்சர் ரங்கசாமியை கண்டித்து ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவித்தார்.

 அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
முதலமைச்சர் ரங்கசாமி தனது தொகுதியை முழுமையாக புறக்கணிக்கிறார் என்றும், தான் பாஜகவிற்கு ஆதரவளிப்பதால் முதலமைச்சர் தான் பரிந்துரை செய்யும் எந்த ஒரு பணிகளையும் ஏற்காமல் இருக்கிறார் என கூறினார்.

 மேலும் தன்னுடைய தொகுதியில் எந்த பணியும் செய்யக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

புதுச்சேரி ஆட்சியில் வெளிப்படையான தன்மை இல்லை என்றும், ஊழல் மலிந்துவிட்டது என தெரிவித்த அவர், முதலமைச்சர் ரங்கசாமி மதுபான தொழிற்சாலை அனுமதி வழங்குவதில் பல முறைகேடுகளை கையாள்கிறார் என குற்றம் சாட்டினார்.

 பாஜகவின் பணம் தேவை, பாஜகவின் ஆளுநர் தேவை என கூறும் முதலமைச்சர், பாஜகவில் ஒரு எம்எல்ஏ கூட வளரக்கூடாது என்றும், புதுச்சேரியில் பாஜக கட்சி வளரகூடாது என நினைக்கிறார். இதனால் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் உடனடியாக தலையிட்டு முதலமைச்சர் ரங்கசாமியை பதவியில் இருந்து தூக்க வேண்டும் எனவும், ரங்கசாமி முதலமைச்சர் பதவியில் இருக்கும் வரை தனது போராட்டம் ஓயாது என தெரிவித்தார்.

இதுகுறித்து தகவலறிந்து, பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம்,அங்காளன் எம்எல்ஏவுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவது புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள்